கட்சித் தலைமையிலிருந்து அடுத்த உத்தரவு வரும்வரை ஊடகத்திலும் பத்திரிகையிலும் அதிமுகவினர் கருத்து தெரிவிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதிமுகவிற்கு ஒற்றை தலைமை தேவை என்று சமீபத்தில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதிமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் அரசியல் வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், எவ்வித பரபரப்பு இன்றி கூட்டம் நிறைவடைந்தது. 5 தீர்மானங்கள் இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் அதிமுக தலைமைக்கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஊடகத்திலும் பத்திரிகையிலும் அதிமுகவினர் கருத்து தெரிவிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”அதிமுக செய்தி தொடர்பாளர்கள் எந்த ஒரு விவகாரத்திலும் கழகத்தின் நிலைப்பாடு என்ன என்பதை, கழக நிர்வாகிகள் ஒப்புதலை பெற்ற கருத்துகளை மட்டுமே தெரிவிப்பதற்கு உரிமை பெற்றவர்கள். நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்து அடுத்த கட்ட அரசியல் பணிகள் தொடங்கியுள்ள வேளையில், செய்தி தொடர்பாளர்கள் தலைமைக் கழகத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வரும்வரை எந்த ஊடகத்திலும் பத்திரிகையிலும் சமூகத் தொடர்பு சாதனங்களிலும் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டாம்.

மற்றவர்கள் யாரும் தங்கள் கருத்துக்களைக் கழகத்தின் கருத்துக்களாக, பத்திரிகை, ஊடகங்களில் தெரிவிக்கக் கூடாது. அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கழகத்தின் சார்பிலோ அல்லது கழக ஆதரவாளர்கள் என்ற பெயரிலோ தனி நபர்களை அழைத்து அதிமுக பிரதிநிதிகள் போல சித்தரித்து, அவர்கள் கழகத்தின் சார்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் அனுமதிக்க வேண்டாம்.” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.