எஸ்.சி, எஸ்.டி. மாணவர்களுக்கான சிபிஎஸ்இ தேர்வுக் கட்டண உயர்வு கண்டனத்திற்குரியது என்று கூறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தேர்வுக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மத்திய இடைநிலைக்கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. தேர்வு முறையில் பல மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் 9ஆம் வகுப்பு படிக்கும்போதே பதிவுசெய்ய வேண்டும், அதேபோல 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 11ஆம் வகுப்பிலேயே பதிவுசெய்ய வேண்டும். கடந்த வாரம் மாற்றம் செய்யப்பட்ட தேர்வு கட்டண விவரங்களை சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. ஏற்கனவே சி.பி.எஸ்.இ பள்ளிகள் பழைய கட்டணங்கள் மூலம் பதிவுகளைத் தொடங்கிவிட்ட நிலையில், தற்போது புதிய கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் இதற்கு முன்பு ரூ.50 கட்டணம் செலுத்தி வந்தனர். சி.பி.எஸ்.இ. வாரியத்தின் திருத்தப்பட்ட தேர்வு கட்டணத்தின்படி, தற்போது அவர்கள், ரூ.1,200 கட்டணம் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 24 மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப்பிரிவினர் இதற்கு முன் ரூ.750 கட்டணம் செலுத்திய நிலையில் இனிமேல் ரூ.1500 கட்டணம் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணம் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கும் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது சி.பி.எஸ்.இ.

12ஆம் வகுப்பு எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் 5 பாடங்கள் தவிர கூடுதல் பாடத்துக்கு கட்டணம் ஏதும் இதற்குமுன் செலுத்த தேவையில்லை. ஆனால் இனிமேல் ஒவ்வொரு கூடுதல் பாடத்துக்கும் ரூ. 300 கட்டணமும், பொதுப்பிரிவினர் இதற்கு முன் கூடுதல் பாடத்துக்கு ரூ.150 செலுத்திய நிலையில் அவர்கள் ரூ. 300 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டண உயர்வுக்கான காரணம் குறித்து சி.பி.எஸ்.இ விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில், கடந்த 5 ஆண்டுகளில் தேர்வுக்கட்டணம் உயர்த்தப்படவே இல்லை எனவும் சுயநிதியில் இயங்கக்கூடிய மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் ஆட்சிமன்றக் குழுதான் இந்தத் தேர்வுக்கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், உயர்த்தப்பட்டுள்ள தேர்வுக்கட்டணம் தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனம் (NIOS) போன்ற பிற தேர்வு வாரியங்களின் கட்டணத்தைவிட குறைவு எனத் தெரிவித்துள்ள சி.பி.எஸ்.இ, பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு முழு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.