திருப்பரங்குன்றம், அரவக்குறச்சி, ஒட்டப்பிடாரம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன், காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் ஏப்ரல் 18ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவகுறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், தேர்தல் தேதி தற்போது அறிவிக்கப்படவில்லை. இதைதொடர்ந்து, மீதமுள்ள மூன்று தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

கடந்த 21ஆம் தேதி சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணமடைந்ததால், அந்த தொகுதியும் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளின் தேர்தல் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டதால், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், சூலூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடத்த தயாராக இருப்பதாகக் கடந்த 23ஆம் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்தார். மேலும் இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் இறுதி முடிவெடுக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் 22 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், வரும் ஏப்ரல் 18ஆம் தேதி 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு இன்று (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, சரியான காலம் வரும்போதுதான் திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த முடியும் என்றும் அவசர கதியில் நடத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைதொடர்ந்து, “தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 18ஆம் தேதி இல்லாவிட்டாலும், அடுத்தகட்ட தேர்தல்களின்போது மேற்படி 3 தொகுதிகளுக்கும் நடத்தலாம் என திமுக சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “3 தொகுதிகளுக்கும் தனியாக அறிவிப்பாணை வெளியிடுவதில் தேர்தல் ஆணையத்திற்கு என்ன பிரச்சினை? அடுத்தகட்ட தேர்தல்களின்போது நடத்தலாமே?” எனக் கேள்வி எழுப்பினர். ஆனால், “நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் அது சாத்தியமில்லை” எனத் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது.

இந்தத் தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் வாபஸ் பெற்றுவிட்டதை திமுக சுட்டிக்காட்டியது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி பாப்டே, “தேர்தல் தொடர்பான ஒரு வழக்கு நிலுவையில் இருந்தால், அந்தத் தொகுதியில் தேர்தல் நடத்தக்கூடாது என எங்கும் சொல்லப்படவில்லை. தேர்தல் ஆணையத்தை யாரோ தவறாக வழிநடத்தியிருக்கிறார்கள்” என்று கூறினார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வாதத்தை ஏற்ற நீதிபதிகள், ஏப்.18ஆம் தேதி தேர்தல் நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தனர். மேலும் காலியாக உள்ள தொகுதிகளுக்கு உரிய நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.