ஃபானி புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒரிசாவிற்குத் தமிழகம், ஆந்திரா, கேரள மாநிலங்கள் உதவிக்கரம் நீட்டி உள்ளன. ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திர பாபு நாயுடு ஒரிசாவிற்கு 15 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். ஆந்திராவின் கடலோர கிராமங்களில் ஃபானியின் தாக்கம் இருந்தாலும் பெருமளவு சேதங்கள் அங்கு இல்லை. ஒரிசாவில் உயிரிழப்புகள் 29 என்று கூறப்படுகிறது. பூரியிலும் குர்தா மாவட்டங்களிலும் புயலினால் பெருமளவு பொருட்சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், ஒரிசாவிற்கு எல்லா வகையிலும் நமது ஆதரவை நீட்டியாக வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் விழியனகரம், ஸ்ரீகாகுளம், விசாகப்பட்டினம் முதலான மாவட்டங்களில் ஒரு மணி நேரத்திற்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று பல வீடுகள், மின்கம்பங்களை சிதைத்திருக்கிறது. ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான குடிநீர், உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

கேரள முதல்வர் பினராயி விஜயன் கடந்த நான்காம் தேதி ஒரிசா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில், கேரளா அரசும் மக்களும் ஒரிசாவின் உடனடித் தேவைகளை நிறைவேற்ற உதவி செய்வோம், புயல் பாதிப்பில் இருக்கும் ஒரிசாவிற்கு இந்த நேரத்தில் நிச்சயம் உடன் இருப்போம் என்று குறிப்பிட்டு உள்ளார். நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரிசாவிற்கு 10 கோடி நிதியுதவி அறிவித்திருக்கிறார். மேலும், சொந்தங்களைப் புயலில் இழந்த குடும்பங்களுக்குத் தனது இரங்கல்களைத் தெரிவித்துள்ளார். ஒரிசாவின் தேவைகளுக்கு உதவிட தமிழகம் தயாராக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

ஃபானி கரையைக் கடந்து இரண்டு நாட்கள் ஆகின்றன. ஆனால், இன்னமும் ஒரிசாவின் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் இல்லை. அடிப்படைத் தேவைகளை மறுநிர்மாணம் செய்ய, புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.