வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திடுவதற்கு எதிராக முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி தொடர்ந்த வழக்கை இன்று (மார்ச் 29) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது டெல்லி உயர் நீதிமன்றம்.

அதிமுகவின் கொள்கை முடிவுகள் போன்ற முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு. முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து, அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியாகவே இருக்கிறது. இதனை தொடர்ந்து, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை ஒருங்கிணைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமியும் நியமித்துக் கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார்.

தமிழகத்தில் 2019 மக்களவை தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து, அதிமுக மற்றும் திமுக கூட்டணிகள் தொகுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட்டுள்ளன. அதிமுகவின் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி, இவர் பாஜகவை விமர்சித்தற்காக கடந்த ஆண்டு(2018) அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், “அதிமுக கட்சியின் விதிகள் படி, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விண்ணப்ப படிவங்களில் கட்சியின் பொதுச் செயலாளர் மட்டுமே கையெழுத்திட அதிகாரம் உண்டு. எனவே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியும் வேட்புமனுவில் கையெழுத்திட தடைவிதிக்க வேண்டும்.

அந்த அதிகாரம் பொதுச் செயலளாருக்கு மட்டுமே உள்ளது. அதிமுக.வில் பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் அதிகாரம் அடிமட்டத் தொண்டர்களுக்கு உரியது. அதனால், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும்.” எனத் தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது. தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்தார் கே.சி.பழனிசாமி.

இந்த வழக்கு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யேகேஷ் கண்ணா அமர்வு முன்பு இன்று (மார்ச் 29) விசாரணைக்கு வந்தபோது தீர்ப்பு வழங்கப்பட்டது. வேட்புமனுவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் கையெழுத்திட தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், கே.சி.பழனிசாமி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டும், அதை எதிர்த்து அவர் வழக்குத் தொடுக்காததை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.