இன்று (ஜூலை 18) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று கூறப்பட்ட நிலையில், சட்டப்பேரவையில் ஏற்பட்ட அமளியால் கர்நாடக சட்டப்பேரவையை நாளை காலை ஒத்திவைத்தார் சபாநாயகர் ரமேஷ்குமார்.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளை சேர்ந்த 16 அதிருப்தி எம்எல்ஏக்கள் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் அளித்திருந்தனர். இதை சபாநாயகர் ஏற்க மறுத்ததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர் அதிருப்தி எம்.எல்.ஏக்கள். விசாரணைக்கு வந்த வழக்கில், எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறு சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இதற்கிடையில், இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இருப்பதாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்திருந்தார். கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களின் அதிருப்தியால் குமாரசாமி ஆட்சி நீடிக்குமா? என்று கடும் சூழல் கர்நாடகாவில் நிலவிவருகிறது. இந்நிலையில், பாஜக ஆட்சியைக் கைப்பற்றக் கடுமையாக முயன்று வருகிறது.

அதிருப்தி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அவைக்கு வருவதும், வராததும் அவர்கள் விருப்பம் எனவும் தெரிவித்திருந்தது. இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப்போவதில்லை என அதிருப்தி எம்.எல்.ஏக்களும் தெரிவித்திருந்தனர்.

இந்த பரபரப்பான சூழலில் இன்று கர்நாடக சட்டப்பேரவை கூடியது. முதலமைச்சர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியிருந்தார். அதன் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. அது முடிந்ததும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. கர்நாடக ஆளுநரும் நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துமாறு சபாநாயகருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

இன்று முழுவதும் சட்டப்பேரவையில் விவாதமும், கூச்சல்களும் ஏற்பட்டதால் எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை நாளை காலை ஒத்திவைத்தார் சபாநாயகர். இதை ஏற்க மறுத்த பாஜக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடியூரப்பா, அவை விட்டுச் செல்லமாட்டோம், இரவு முழுக்க இங்கே இருப்போம் எனத் தெரிவித்துள்ளார். இதனால் அவையில் அமளி ஏற்பட்டது.

“இன்று நள்ளிரவுவரைகூட விவாதம் நீடிக்கட்டும்: ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பை இன்றே நடத்துங்கள் என்று தெரிவித்திருந்தார்.” கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா.