தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணியோடு தேர்தல் பிரச்சாரம் முடிவடையவுள்ள நிலையில், கரூர் வெங்கமேடு பகுதியில் அதிமுக-திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கரூர் பேருந்து நிலையம் அருகே பரப்புரைச் செய்ய அதிமுக, காங்கிரஸ் வேட்பாளர்கள் இருவருக்கும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் நாளை மறுநாள் (ஏப்ரல் 18) நடைபெறுகிறது. இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இறுதிகட்ட தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.

கரூர் வெங்கமேடு பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தில் இறுதிகட்ட பிரச்சாரம் செய்ய அதிமுக- திமுக சார்பாக அனுமதி வாங்கியிருந்தனர். கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் தம்பிதுரைக்கு ஆதாரவாகவும், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதரவாகவும் இரு கட்சிகளும் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதனால் இரண்டு கட்சி தொண்டர்களும் பேருந்து நிலையம் முன்பு குவிந்தனர். அப்போது இருதரப்பிலும் இருந்து ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிவந்த நிலையில், வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் ஏற்பட்டது. இதானல் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் அங்கு துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு ஆதாரவாக வாக்குசேகரிப்பில் ஈடுபட்ட நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த மோதலைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி கூறிய மாவட்ட தேர்தல் அலுவலர் அன்பழகன், கரூரில் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே பிரசாரம் செய்யத் தடை உத்தரவு பிறப்பித்தார்.