கல்வித் துறையில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் அடிக்கும் கட்டணக் கொள்ளை மாணவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில் புதிய கல்விக் கொள்கையின் வரைவில் மத்திய பாஜக அரசு ஏதும் குறிப்பிடவில்லை.

மோடி அரசாங்கம், ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களுக்குள்ளாக புதிய தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் அமலாக்குவோம் என உறுதியளித்திருந்தது. கல்வித்துறையில் உள்ள பிரச்சனைகள் களைய சிறந்த கருவியாகும் எனவும் இது கல்வித்துறையின் மறுமலர்ச்சி எனவும் மக்களை ஏமாற்றியது. தனியார்மயப்படுத்தல், வணிகமயப்படுத்தல் மற்றும் வகுப்புவாதத்தை திணித்தல் போன்றவை புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்திற்கு வருவதற்கு முன்பாகவே  மோடி அரசாங்கம் கல்வித் துறையில் செய்ய விரும்பும் மாற்றங்களாக வெளியிடப்பட்ட  பல வரைவு அறிக்கைகள் ஆகும்.  இது இந்திய அரசியலமைப்பின் பிரதான நோக்கத்திற்கு முரணான செயலாகும்.  மத்திய பாஜக அரசின் பட்ஜெட் அறிவிப்புகளில் கூட கல்வித்துறையைப் பற்றிய பல்வேறு அறிவிப்புகள் மட்டுமே வருவதுண்டு. ஆனால் அவற்றிற்காக ஒதுக்கப்படும் நிதி போதுமானதாக இருப்பதில்லை.

கோத்தாரி குழுவானது, கல்வித்துறைக்கென ஒதுக்கப்படும் நிதி ஒட்டுமொத்த ஜி.டி.பி யில் 6 சதவீதமாக இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ஆனால் 2018-19 ஜிடிபி 3.48 சதவீதமாக குறைந்துள்ளது.மத்திய, மாநில அரசுகள் பொது நிதியிலிருந்து ஒதுக்கும் நிதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 2.7 சதவீதம் மட்டுமே. பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து கல்வித்துறைக்கென ஒதுக்கப்படும் நிதியின் அளவு தொடர்ந்து குறைந்தும் விலைவாசிகள் தொடர்ந்து அதிகரித்தும் வருகின்றன. மத்திய அரசின் பட்ஜெட் ஆவணங்களை ஆராய்ந்து பார்ப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

மேற்கண்ட நிலையுடன் சேர்ந்து பாஜக அரசு செய்யும் முக்கிய வேலை, கல்வித்துறையை முற்றிலுமாக தனியார்மயப்படுத்துவது.  கடந்த 5 ஆண்டுகளாக  கல்வித் துறையின் பொது நோக்கத்தை சீர்குலைத்து கல்வித்துறையின் பங்குதாரர்கள் எனக் குறிப்பிடப்படும் எல்லா தரப்பினரையும் புறக்கணித்து வெறும் அறிவிப்பின் வாயிலாக மட்டுமே முடிவுகளை அம்பலப்படுத்துகின்றது மத்திய பாஜக அரசு. ராஷ்டிரிய உச்சார் ஷிக்சா அபியான் (RUSA) என்னும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி திட்டதின் அடிப்படையில் கல்வித்துறைக்காக பெறப்படும் பல்வேறு வடிவிலான நிதி மூலதனத்தை ஒற்றைத் தன்மையாக்கி மத்திய அரசு மட்டுமே கட்டுப்படுத்தக்கூடிய வகையில், தேர்வு அடிப்படையிலான கடன் அமைப்பு என்னும் முறையை அறிமுகம் செய்து அதனடிப்படையில் சிறப்பாக பணியாற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நிதி கடனாக வழங்கப்படும் போன்ற நிபந்தனைகளை விதிக்கிறது. மேலும்  தேர்வு முறையில் மாற்றம்,கட்டாய அங்கீகாரம் போன்றவற்றையும் நிறுவனங்களின் மீது திணிக்கிறது.

ரூசா (RUSA) திட்டத்தின் மூலம் கல்வி நிறுவனங்கள் நெறிமுறை அடிப்படையுடன் கூடிய செயல்திறன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இதன் மூலமாக மாநில அரசோ, கல்வி நிறுவனங்களோ எந்தவித நேரடி அதிகாரத்தையும் கல்வி நிறுவனங்களில் கொண்டிருக்க முடியாது. சமீபத்தில் 60 பாரம்பரிய தன்னாட்சி கல்வி நிறுவனங்களுக்கு நிதியை மத்திய அரசே முடிவு செய்து வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.