நாடாளுமன்றத்தில் கழிவக்கற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடைச்சட்டம் பற்றி நேற்று(9.07.2019) விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, கழிவகற்றும் பணியை அரசு கண்காணிப்பு குழுக்களின் மூலம் முறையாக கண்காணித்து வருகிறது  என்றும் கடந்த 7 ஆண்டுகளில் 53,598 கழிவகற்றும் பணியாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

1993 முதல் கழிவகற்றும் பணிகளுக்கு மனிதர்களை நியமிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி உச்ச நீதிமன்றம் “நாடு முழுவதும் கழிவகற்றும் பணியில் ஈடுபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கீட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டும்” என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. 

இந்நிலையில் 1993 முதல் இன்றுவரை 620 பேர் கழிவகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மரணமடைந்துள்ளனர். இது பதிவுசெய்யப்பட வழக்குகள் மட்டுமே. இதில் 445 வழக்குகளில் முழு இழப்பீட்டு தொகையும் 58 வழக்குகளில் குறிப்பிட்ட ஒரு தொகையும் வழங்கப்பட்டுள்ளன. 117 வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. 

இதில் தமிழகத்தில் மட்டும் 144 வழக்குகள் பதிவாகியுள்ளன. கழிவகற்றும் பணியில் ஈடுபட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை பதிவுசெய்து சமர்பித்த 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து குஜராத் (131), கர்நாடகா (75), உத்தரபிரதேசம் (71) உள்ளன.

இறந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு இப்படியென்றால், கடந்த 2018ஆம் ஆண்டு மத்திய சமூகநீதி அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பு நாடெங்கும் 20,500 பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் இவர்களில் 6000 பேர் உத்தர பிரதேசத்தில் இருக்கிறார்கள் என்றும் புள்ளி விபரம் சொல்கிறது. இதற்கு முன்பும் 2014 முதல் 2017 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 13,770 பேர் கண்டறியப்பட்டனர். 2011 சமூக பொருளாதாரக் கணக்கெடுப்பு 1,82,505 பேர் இதில் ஈடுபட்டிருப்பதாகத் தெரிவிக்கிறது.

தூய்மை இந்தியா திட்டத்தில் வசூலிக்கப்பட்ட நிதி என்ன செய்யப்பட்டது? கணக்கெடுப்பு நடத்துவதையும் இழப்பீடு வழங்குவதையுமே தொழிலாகக் கொண்டுள்ள அரசு, அம்மனிதர்களின் மீட்புக்கும் மேம்பாட்டிற்கும் என்ன செயல்வடிவங்களைக் கொண்டுவந்துள்ளது என்றால் பெரிய கேள்விக்குறியே மிச்சம். 

இதில் இன்னொரு பெரும் கொடுமை என்னவென்றால், கழிவகற்றும் பணிக்கு ஆட்களை நியமிப்போர் பற்றிய எந்தவித குறிப்போ, கணக்கெடுப்போ இதுவரை இல்லை என்பதுதான்! தடைசெய்யப்பட்ட ஒன்று இன்னும் எவ்வித சிக்கலுமின்றி செயல்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி கவலைகொள்ளாமல் கணக்கெடுப்புகளை எடுத்துக்கொண்டும் இழப்பீடுகளை வழங்கிகொண்டுமே இருப்பது அரசாங்கம் இதில் எந்த அளவுக்கு கவனம் செலுத்துகிறது என்று பொதுமக்களாகிய நமக்கு வெட்டவெளிச்சமாக்குகிறது.