காங்கிரஸ் சின்னத்தைத் தவிர்த்து மற்ற சின்னத்திற்கு வாக்களித்தால் ஷாக் அடிக்கும் எனச் சத்தீஸ்கரில் காங்கிரஸ் அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவருக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகம், புதுவை உட்பட 12 மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் நாளை ஒரே கட்டமாக மக்களவை மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தல்களின் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காங்கிரஸ் ஆட்சி நடக்கும் சத்தீஸ்கரில் ஏற்கனவே முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி முடிந்துள்ள நிலையில், நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும், மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறுகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் கான்டா தொகுதியில் ஐந்து முறை காங்கிரஸின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கவாசி லக்மா. 66 வயதான இவர் சத்தீஸ்கர் மாநிலத்தின் சுங்கத்துறை வர்த்தக மற்றும் தொழில் அமைச்சராக உள்ளார். தேர்தலையொட்டி, வாக்குச் சேகரிப்பில் நேற்று ஈடுபட்ட காங்கிரஸ் அமைச்சர் கவாசி லக்மாவின் பேச்சு அங்குச் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் பிரச்சாத்தின்போது அவர், காங்கிரஸ் சின்னம் வாக்கு இயந்திரத்தில் முதல் இடத்தில் உள்ளது. அதனால் வாக்காளர்கள் அனைவரும் முதல் பொத்தானை அழுத்த வேண்டும். அதைத் தவிர்த்து நீங்கள் இரண்டு அல்லது மூன்றாவது இடத்தில் உள்ள பொத்தானை அழுத்தினால், உங்களுக்கு ஷாக் அடிக்கும். அதனால், முதலில் உள்ள காங்கிரஸின் கைச்சின்னத்திற்கே வாக்காளர் அனைவரும் வாக்களிக்க வேண்டும்.” எனப் பேசியுள்ளார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாகத் தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, லக்மா விளக்கமளிக்கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது தேர்தல் ஆணையம்.