ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்பின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரை இரண்டாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றப்படும் எனவும் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டு லடாக் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்றப்படுகிறது.

காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பாதுகாப்பு படைகள் குவிப்பு, அமர்நாத் யாத்திரை ரத்து, சுற்றுலாப் பயணிகள் வெளியேற உத்தரவு, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர்கள் உமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட முக்கிய அரசியல்வாதிகள் வீட்டுக் காவலில் அடைப்பு, தலைநகர் ஸ்ரீநகரில் 144 தடை உத்தரவு, காஷ்மீர் பள்ளத்தாக்கில் மொபைல் இண்டர்நெட் சேவை துண்டிப்பு என காஷ்மீர் விவகாரத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ மற்றும் 370ஆவது பிரிவுகளை நீக்குதல், ஜம்மு-காஷ்மீரை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என பிரித்தல் போன்றவற்றிற்காக இந்த முன்னேற்பாடுகள் செய்யப்படுவதாக, தகவல்கள் பரவின.

இந்நிலையில், நேற்று முழுவதும் அமித்ஷா ஆலோசனைகளில் ஈடுபட்டிருந்த நிலையில், இன்று காலை சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமரின் இல்லத்தில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காஷ்மீர் விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, காஷ்மீர் தொடர்பான தீர்மானத்தை கொண்டுவந்தார். இதன்படி, காஷ்மீருக்கு 1954ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்படும் என்றார்.

இதேபோல, லடாக் மக்களின் நீண்ட கால விருப்பத்தை ஏற்று, அப்பகுதி ஜம்மு-காஷ்மீரில் இருந்து தனியாகப் பிரிக்கப்பட்டு, சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக அமையும்  என்றும் மேலும் ஜம்மு-காஷ்மீரும் பாதுகாப்பு காரணங்களுக்காக சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக அமையும் எனவு அமித்ஷா அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு முன்னரும், அறிவிப்புக்கு பின்னரும் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. பல கட்சிகள் இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் அதிமுக இந்த அறிவிப்பு வரவேற்ப்பை தந்துள்ளது.

இதனிடையே, அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்கும் குடியரசுத் தலைவரின் அறிவிப்பாணை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.