கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச தடைகோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன், 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் நெருங்கும் வேளையில் தேர்தல் பிரச்சாரங்களில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர். ஆளும் கட்சியான அதிமுக, எதிர்கட்சியான திமுக மீதும், திமுக அதிமுக மீதும் அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை வைத்துவருகின்றனர்.

அந்தவகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு, கொடநாடு பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பாகச் செய்தியாளர் மேத்யூ சாமுவேல் என்பவர் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். கொடநாடு விவகாரத்தில் முதல்வர் பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

தேர்தல் பரப்புரையின்போது, கொடநாடு விவகாரத்தைச் சுட்டிக்காட்டி ஆளும் அரசான அதிமுக மற்றும் முதல்வர் பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுதொடர்பாக, ஸ்டாலின் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்டாலினை நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டது. இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி ஸ்டாலின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அவதூறு வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், இந்தத் தடை உத்தரவை நீக்கக்கோரி அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், கோடநாடு விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ‘குற்ற வழக்கு விசாரணை நிலுவலையில் உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் ஈடுபட்டுவருவதால், இதுகுறித்து, ஏப்ரல் 3ஆம் தேதிக்குள் அவர் பதிலளிக்க உத்தரவிட்டார் நீதிபதி.

இந்நிலையில், இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 1) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொடநாடு விவகாரத்தில் முதல்வர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பேச தடை விதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி, அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேலின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.