எதிர்ப்பின் காலம் -1

இந்த உலகமே ஓர் அவசரநிலை பிரகடனத்துக்குள் வந்துவிட்டதுபோன்ற உணர்வில் இன்று இருக்கிறோம். எங்கோ ஓர் ஆஃபிரிக்க நாட்டில் கருப்பர்கள் நோயால் செத்து வீழ்கிறார்கள் என்றால் இந்த உலகம் இப்படி பதற்றப்பட்டிருக்காது. ஆனால் அமெரிக்கக் குடியரசு தலைவர் டோனால்ட் ட்ரம்பே தனக்கு கோவிட்-19 இருக்கிறதா என்று ஐயப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள முடிவெடுத்திருக்கிறார் என்கிற செய்தி சுயமோக ‘நாகரீக’ உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நோயின் மையம் சீனாவிலிருந்து ஐரோப்பாவுக்கு மாறியிருக்கிறது. நாளை அது அமெரிக்காவாக இருக்கலாம்.

இந்தியாவில் நிலைமை இன்னும் உக்கிரமடையவில்லை. நாம் மீம்ஸ் போட்டு கொரோனாவை கலாய்த்துக்கொண்டிருக்கிறோம். பொருளாதாரச் சரிவிலிருந்தும் சிஏஏவுக்கு எதிரான போராட்டச் சூட்டிலிருந்தும் தப்புவதற்கு கொரோனா ஆளும்கட்சிக்கு இப்போது உதவியிருக்கிறது. ஆனால் நோயாளிகளின் எண்ணிக்கையும் வீச்சும் அதிகமானால் அந்த பாசிச சொகுசு காணாமல் போய்விடக்கூடும். நேற்று கொரோனாவைத் தேசியப் பேரிடர் என மோடி அரசு அறிவித்திருக்கிறது.

கொரானா பல முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. எப்போதுமே சதிக் கோட்பாடுகளை விரும்புபவர்களுக்கும் எளிதான தீர்வுகளை விரும்புவர்களுக்கும் இது ஒரு உயிரியல் போரா என்ற கேள்வி மிகவும் பிடித்துப்போயிருக்கிறது. ஆனால் நாம் எழுப்பவேண்டிய முக்கிய கேள்வி இந்தப் பெருந்தொற்றினை எதிர்கொள்ளும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா என்பதுதான். நம்மிடம் என்ன, இந்த உலகின் மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவிடம் இருக்கிறதா?

பொதுச்சுகாதாரம் வலுவாக உள்ள சீனாவுக்கும் அதில் கோட்டைவிட்ட அமெரிக்காவுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஓர் உதாரணத்தை வைத்து விளக்கிவிடலாம். முகமறைப்புகளுக்கு (face masks) ஏற்பட்ட திடீர் தேவையை இந்த இரண்டு நாடுகளும் எப்படி எதிர்கொண்டன?

சீனாவில் கொரோனா தொற்று வெளிப்பட்ட சில நாட்களிலேயே அங்கே முகமறைப்புகளுக்கான தேவை அதிகமாகிவிட்டது. கோடிக்கணக்கான பேர் அதை வாங்க முயற்சி செய்தார்கள், முகமறைப்புகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. சீனாவின் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் இந்த தருணத்தில் ஒரு முக்கியமான முடிவை எடுத்தன. முகமறைப்புகளின் விலைகளை உற்பத்தியாளர்கள் அதிகரிக்கமுடியாதபடி தடுத்துவிட்டன. மாறாக முகமறைப்புகளின் உற்பத்தியை அதிகரிக்கும் முறையை முடுக்கின. அப்படி நடக்கவில்லை என்றால் முகமறைப்புகளுக்கான கிராக்கி அதிகரித்து, வசதியானவர்களுக்கு மட்டுமே முகமறைப்புகள் கிடைக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

ஆனால் இந்தப் பிரச்சினையை அமெரிக்கா உள்பட பல நாடுகள் எப்படி எதிர்கொண்டன? அமெரிக்காதான் சுதந்திரச் சந்தை கொண்ட நாடாயிற்றே! அமெரிக்காவில் முகமறைப்புகளின் தேவை அதிகரிக்க அதிகரிக்க அவற்றின் விலைகளும் நான்கு மடங்குவரை அதிகரித்தன. நாடே அலறியது.

சீனாவின் ‘முகமறைப்பு கொள்கை’ அங்கே மக்கள் மத்தியில் பதற்றத்தைக் குறைத்தது. உண்மையில் சீனாவில் சார்ஸ் காலத்திலிருந்தே மக்கள் முகமறைப்புக்குப் பழக்கப்பட்டிருந்தார்கள். சொல்லப்போனால் முகமறைப்பால் கொரானாவை முற்றிலும் தடுத்துவிடமுடியாது. அது காற்றில் பரவவில்லை. ஆனால் அது குறைந்தபட்ச தடுப்பாக கருதப்படுகிறது, உளவியல்ரீதியில் அது ஒரு தேவையாகவும் இருக்கிறது. சீனாவில் கொரோனாவின் அச்சம் பரவிய நாட்களில், ஒரு நகரத்தில், பெண்கள் தங்களுடைய பிராக்களை வெட்டி முகமறைப்புகளை உருவாக்கிக்கொண்டார்கள் என்கிற செய்தி அச்சத்தின் உச்சத்தைக் காட்டுகிறது.

அமெரிக்காவில் என்ன நடந்தது? தனியார் நிறுவனங்களாலும் ஈகாமர்ஸ் நிறுவனங்களாலும் ஏதும் செய்யமுடியவில்லை. நேரம் பார்த்துக் கொள்ளையடிப்பதை அவர்களுயை சந்தை மதவாதம் ஊக்குவித்தது. எனவே அரசு தலையிட்டு – ட்ரம்ப் தலையிட்டு – 3.5 கோடி முகமறைப்புகள் தயாரிக்க 3எம் என்கிற நிறுவனத்திடம் ஒரு பில்லியன் டாலருக்கு ஆர்டர் போடும் அளவுக்கு நிலைமை முற்றியது. முகமறைப்புகளின் விலை குறைந்ததோ இல்லையோ புதிய ஆர்டர் பெற்ற 3எம் நிறுவனத்தில் பங்குகள் வால் ஸ்ட்ரீட்டில் எகிறின. முகமறைப்புகளின் விலைகள் எகிறுவதைத் தடுக்கமுடியாத அமேசான், புதிதாகப் போலி முகமுறைப்பு உற்பத்தியாளர்கள் சேருவதைத் தடுக்கத்தான் முயற்சி செய்கிறது. அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு ஒரு மில்லியன் முகமறைப்புகளை நன்கொடையாகத் தருவதாக அலிபாபா.காமின் சீன முதலாளி ஜாக் மா அறிவித்திருக்கிறார்.

முகமறைப்புகளைத் திடீரென கோடிக்கணக்கில் உற்பத்தி செய்துவிடமுடியாதுதான். எந்த நாடாக இருந்தாலும் திண்டாடித்தான் ஆகவேண்டும். ஆனால் முகமறைப்பு வணிகம் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் எவ்வாறு கையாளப்படுகிறது என்பது பொதுச் சுகாதாரம் பற்றிய உங்கள் கொள்கையையும் நடைமுறையும் காட்டுகிறது.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வித்தியாசம் அங்கேதான் இருக்கிறது. பிஓய் என்கிற சீன நிறுவனம் ஒரு நாளைக்கு 50 லட்சம் முகமறைப்புகளை உற்பத்தி செய்யும் அளவுக்கு தன் உற்பத்தித்திறனை மேம்படுத்துகிறது. ஆனால் அந்த முகமறைப்புகளை சீனா எங்களுக்கு அனுப்பமறுக்கிறது என்கிற அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் குற்றம்சாட்டுகிறது. சீனா முகமறைப்புகளை விற்காமல் பதுக்குகிறது என்று அலறுகிறது. என்ன செய்ய?

பொதுச் சுகாதாரம் பற்றி உருப்படியான அக்கறை இருந்திருந்தால், அமெரிக்காவால் இந்நேரம் இந்த ஏற்பாட்டைச் செய்துகொண்டிருக்கமுடியும். முகமறைப்புகள் என்ன குவாண்டம் கம்யூட்டர்களா, அல்லது பறக்கும் கார்களா? சந்தையில் அரசு தலையிடக்கூடவே கூடாது என்றார்களே, இப்போது ஏன் டிரம்ப் தலையிட வேண்டி வந்தது?

பணம் பிரச்சினை அல்ல, தொழில்நுட்பம் பிரச்சினை அல்ல. ஆனால் அமெரிக்காவிடம் வலுவான பொது சுகாதாரக்கொள்கையும் இல்லை, அமைப்புகளும் போதுமானதாக இல்லை. சந்தையின் தேவையை சந்தையே நிறைவுசெய்யும் என்று பாடமெடுத்தவர்கள், இப்போது முகமறைப்புகளை வாங்குவதற்காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பிரச்சினை இப்போது அமெரிக்காவின் தேர்தல் பிரச்சினையாக மாறிக்கொண்டிருக்கிறது. பெர்னி சாண்டர்ஸ்தான் தெளிவாக விளக்குகிறார். ஆனால் ஜனநாயகக் கட்சி அவரைத் தவிர்க்க நினைக்கிறது.

வெள்ளை மாளிகையிலிருந்தும் வால் ஸ்ட்ரீட்டிலிருந்தும் ஜனநாயகக் கட்சியின் தலைமையகத்திலிருந்தும் தங்கள் அவமானம் தொற்றிக்கொண்ட முகத்தை மறைக்க எங்கெங்கோ ஓடிக்கொண்டிருக்கிறார்கள் அமெரிக்காவின் சந்தை மதவாதிகள். முகமறைப்புகள் தீர்வல்லதான். ஆனால் அது ஒரு உளவியல் தேவை என்கிற அளவிலாவது தேவைப்படுகிறது. அமெரிக்காவால் தங்கள் மக்களுக்கு அதைக்கூட உத்தரவாதம் செய்யமுடியவில்லை.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. அழிவு கொள்ளை தீமை கழகம் 2.0 தலைவன் அமெரிக்கா- ஆழி செந்தில்நாதன்
  2. பால்கனியில் நின்று கைதட்டச் சொல்லும் பரிதாபகரமான சர்வாதிகாரி - ஆழி செந்தில்நாதன்