இந்தியாவில் இன்றுவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1397. தமிழ்நாட்டில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 74.  நோய் பரவல் குறித்து தமிழக அரசுக்கு கிடைத்த சிறப்பு தகவலின் அடிப்படையில் செய்த நோய் பரிசோதனையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்னும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளும் இருக்கின்றன.கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி தில்லியில் தப்லீக் ஜமாத் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களின் மூலமாக நோய் தொற்று பரவியிருக்கிறது. அந்த நிகழ்வில் தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் இருந்து 1000க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலருக்கு நோய் தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் இஸ்லாமியர்கள்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் தங்கள் சொந்த ஊருக்கு  கால்நடையாக டெல்லியிலிருந்து சாலைவழியாக நடந்து சென்றவர்களின் கூட்டம் 10000க்கும் மேலிருக்கும்.சிறப்பு பேருந்துகளுக்காக நெருக்கியடித்துக் கொண்டிருந்தவர்களின் கூட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதை இனிமேல் தான் கண்டறிவார்கள். அந்தக் கூட்டத்தில் அனைத்து மதத்தினரும் தான் இருந்தனர்.

கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி  அன்று இந்தியா முழுமைக்கும் ஒரு நாள் ஊரடங்கு உத்தரவை மாண்புமிகு பாரத பிரதமர் அறிவித்தார். அன்றுதான் அயோத்தியில் எண்ணற்ற மக்கள் கூட்டத்தோடு பகவான் இராமருக்கு கோவில் கட்டும் பணிகள் தொடங்கின. கொரோனா வைரஸ்    அந்தக் கூட்டத்தில் பரவாதா?

கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி  அன்று திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவம் நடந்தது. நாடெங்கிலுமிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸ்    அந்தக் கூட்டத்தில் பரவாதா?

கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி  அகமதாபாத்தில்  அமெரிக்க அதிபர் உரையாற்றினார்.மாண்புமிகு பாரத பிரதமர்அவர்களும் கலந்து கொண்டார். பல இலட்சக்கணக்கான மக்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். அவர்களில் சில ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.கொரோனா வைரஸ்    அந்தக் கூட்டத்தில் பரவாதா?

கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி இரவு தமிழ்நாட்டில் கோயம்புத்தூரில் இஷா யோகா மையத்தின் சார்பாக மஹா சிவராத்திரி கொண்டாடப்பட்டது. இரவு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாண்புமிகு துணை குடியரசு தலைவர் அவர்கள் கலந்து கொண்டார்.தமிழக, கர்நாடக அமைச்சர்களும் கலந்து கொண்டனர். பல இலட்சக்கணக்கான மக்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொண்டனர். அவர்களில் பல ஆயிரக்கணக்கான மக்கள் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள்.கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நபர்கள் அந்தக் கூட்டத்தில் இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு. கொரோனா வைரஸ்    அந்தக் கூட்டத்தில் பரவாதா?

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி கண்டறியப்பட்டது. அதற்கு பிறகுதான் இத்தனை பெரிய கூட்டங்களை அரசும், மக்களும் சந்தித்திருக்கிறார்கள். இந்த கூட்டங்களுக்கு காரணமானவர்கள் குறித்தும் அந்த நேரத்தில் உலகளாவிய நோய் பரவல் குறித்தும் நாம் பொதுவெளியில் அரிதினும் அரிதாகவே விவாதித்தோம். மஹா சிவராத்திரியிலும், இராம பூமி பூஜை நிகழ்விலும் கலந்து கொண்டவர்களை மதத்தை சிறுமைபடுத்தும் நோக்கத்துடன், தனிமைபடுத்தும் நோக்கத்துடன் பிற சமூகத்தினர் தொடர்புபடுத்தியது இல்லை. இந்நிலையில் கடந்த சில நாட்களாக டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் கருத்தரங்கு குறித்து சிலர் தரக்குறைவான, கீழ்த்தரமான, கண்ணியமற்ற வார்த்தைகளால் சமூக வலைதளங்களில்  பேசியும், எழுதியும் வருவது வருத்தமளிக்கிறது. தப்லீக் ஜமாத் கருத்தரங்கினை இந்த சூழலில் நடத்தியிருக்க தேவையில்லை. ஆனாலும் உரிய முறையில் காவல் துறையின் அனுமதி பெற்று நடத்தியிருக்கிறார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸுடன் தொடர்புபடுத்தி “தப்லீக் வைரஸ்” என்று எழுதுவதும் பேசுவதும் மனிதநேயம் இல்லாத தன்மையாகவே கருதவேண்டியிருக்கிறது.

வரைபடமொன்றில் மசூதியிருக்கிறது. அந்த மசூதியின் ஒரு வழியாக இஸ்லாமியர்கள் நுழைகிறார்கள்.அவர்களில் சிலரது தலைகளை கொரோனா வைரஸாக வரைந்திருக்கின்றார்கள். மசூதியின் இன்னொரு வழியாக வெளியேறும் அனைவரது தலையும் கொரோனா வைரஸாக வரைந்திருக்கிறார்கள் சிலர்.இது எத்தனை கேவலமானதொரு செயல்.

மருத்துவ கல்வியில் மிக முக்கியமான ஒன்று நோயாளிகளின் தனியுரிமை. மருத்துவர்களும் பணியாளர்களும் நோய் தாக்கியவரின் பெயர், விவரங்களை பொதுவெளியில் தெரிவிக்க கூடாது. அதுவொரு தார்மீக நெறி. அதனால் தான்  தென் கொரியாவின்  60% நோய் பரவலுக்கு காரணமானவரை நோயாளி எண் 31 என்று மட்டுமே பொதுவெளியில் கூறுகின்றனர். தேவாலயங்களில் ஏறத்தாழ 1600க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நோய் தொற்றுதலுக்கு காரணமான அந்த நபரை நோயாளி எண் 31  என்றே பொதுவெளியில் அழைக்கின்றனர். அப்படியிருக்க ஒரு அமைப்பு நடத்திய கருத்தரங்கை வைத்து அவர்களை இழிவு செய்யும் விதமாக எழுவதும் பேசுவதும் ஏன் நினைப்பதும் கூட நாகரீகமற்ற செயல் தானே.

தமிழக அரசின் சுகாதார துறை செயலர் அவர்கள் ஊடகங்களில் மிகவும் தயங்கியபடிதான் இதுகுறித்து தனது கருத்துக்களை முன்வைக்கின்றார். எந்த  வண்ணத்தையும் யார் மீதும் தனது வார்த்கைகளால் பூசிவிடக் கூடாது என்ற அக்கறையிலும், நோய் தொற்று பரவலை தவிர்க்க வேண்டும், நோய் தாக்கியவர்களை கண்டறியவேண்டும் என்ற தவிப்பிலும் அவர் தனது கருத்துக்களை முன்வைக்கின்றார்.  ஆனால் பொதுவெளியில் சமூக ஊடகங்களில் சிலர் இஸ்லாமியர்கள் குறித்து தொடர்ந்து தவறாக பேசுவதும் எழுவதும் தேவையற்ற எதிர்வினைகளை உருவாக்கும் என்பதை மனதில் இருத்த வேண்டும். கையறு நிலைகளில், பேரிடர் காலங்களில் இஸ்லாமியர்களின் சமூக பங்களிப்பை  நினைத்துப் பார்க்க வேண்டும்.