புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலையடுத்து காஷ்மீர் சாலையில் பயணிக்கும் மக்களின் கைகளில் நீதிபதியின் முத்திரை குத்தப்பட்டு வருவது மக்களுக்கு இழக்கப்படும் அநீதிகள் என உமர் அப்துல்லா டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை அடுத்து  ராணுவ வீரர்களின் வாகனங்கள் பலத்த பாதுகாப்புடன் அனுப்பபடுகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெறுகிற மக்களவை தேர்தல் இன்று தொடங்கி முதல்கட்ட வாக்குப்பதிவும் நடைபெற்று வருகின்றது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற தாக்குதலைத் நடைப்பெறாமல் இருப்பதற்காக, காஷ்மீரில் ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 31-ம் தேதி வரை ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில் மாலை 4 மணி முதல்  5 மணி வரை குறிப்பிட்ட சில சாலையில் பொதுமக்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டது. பாரமுல்லாவிலிருந்து உதம்பூர் வரை இந்தத் தடை அமலுக்கு வந்ததுள்ளதால் பொதுமக்கள், ஏதேனும் அவசரமாக இந்தச் சாலையில் பயணிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். அப்படி அவர்கள் பயணிக்க வேண்டுமென்றால் அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.  இதனை எதிர்த்து எதிர்க்கட்சிகள்  கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுகுறித்து  உமர் அப்துல்லா ட்விட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், ஒருவரின் கையில் ஸ்ரீநகர் சாலையில் பயணிக்க அனுமதிக்கலாம் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு உள்ளூர் நீதிபதியின் முத்திரை குத்தப்பட்டுள்ளது. அப்புகைப்படத்துடன், “ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு அவர்களது நெடுஞ்சாலையைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கையில் முத்திரை பதித்து எழுதப்பட்டிருக்கிறது. இதை என்னவென்று சொல்வது என எனக்குத் தெரியவில்லை. காகிதப் பயன்பாட்டைத் தவிர்க்க, மக்களின் கைகளில் முத்திரையா? இதுபோன்று மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் ஆத்திரமூட்டுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.