288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு வரும் 21 ஆம் தேதி வாக்குப்பதிவும், 24ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர முன்னேற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்தல் அறிக்கையை பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.  சாவர்க்கர், ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே உள்ளிட்ட தலைவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னாவை வழங்க வலியுறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பல்வேறு கட்சித் தலைவர்கள் தங்களின் எதிர்ப்பையும் ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியதாவது, “மகாத்மா காந்திஜியின் 150வது ஆண்டு விழாவை நாம் கொண்டாடி வருகிறோம். இந்தவேளையில், அவரது படுகொலைக்குக் காரணமான ஒரு குற்றவாளிகளில் ஒருவரான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க கோருவது என்பது மிகப்பெரிய முரணாகும். இதனை நாம் எதிர்க்க வேண்டும்.

“சாவர்க்கருக்கு மட்டுமல்ல, கோட்சேவுக்கும் பாரத ரத்னா கொடுப்பார்கள்”: பாஜக வாக்குறுதிக்கு டி.ராஜா கண்டனம்!
பா.ஜ.க சாவர்க்கரை தொடர்ந்து, காந்தியைக் கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சேவுக்கும் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க அறிவிக்கும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை. இதுதான் அவர்களின் நிகழ்ச்சி நிரல்” என கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள காங்கிரசின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் “சாவர்க்கருக்கு பாரத ரத்னா கொடுக்கப்படுமாயின் இந்த நாட்டை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்” எனக் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார் .

சாவர்க்கரை விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சிகளுக்குப் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தனது கண்டனத்தைத் தெறிவித்து வருகிறார்.