“கல்வி என்பது சமூக அறம்; ‘பணம் இருந்தால் விளையாடு’ என்ற சூதாட்டமாக அது மாறக்கூடாது” என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சூர்யா.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு தொடர்பாக நடிகர் சூர்யா பல கருத்துகளைத் தெரிவித்துவந்தார். அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, சமமான தரமான கல்வி, மும்மொழிக்கொள்கை எனப் பல கருத்துகளைச் சமீபத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த கருத்துகளுக்கு பாஜக, அதிமுக தரப்பிலிருந்து கடும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் தெரிவித்துவந்தனர். அதேபோல சூர்யாவுக்குப் பலர் ஆதரவுகளும் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், தன்னை விமர்சித்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் புதிய அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார் சூர்யா.

அதில், “கல்வி என்பது அறம்; ‘பணம் இருந்தால் விளையாடு’ என்ற சூதாட்டமா அது. புதிய கல்விக் கொள்கையில் எல்லாவிதமான பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கான பரிந்துரை இருப்பது அச்சமூட்டுகிறது. உயர் கல்வியிலிருந்து கிராமப்புற மாணவர்களை இந்த நுழைவுத் தேர்வுகள் துடைத்து எறிந்துவிடும்.

ஏழை மாணவர்களுக்கு கல்விதான் உயரப் பறப்பதற்கானச் சிறகு; அது முறிந்துபோகாமல் இருக்க நாம் அனைவரும் துணைநிற்போம். கல்வியைப் பற்றிப் பேசுவதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது என்று எதிர்க்கருத்து வந்தபோது, என் கருத்துக்களை ஆதரித்த அனைவருக்கும் நன்றி.

சமமான தேர்வு வைப்பதைவிட, சமமான தரமான இலவசக் கல்வியை உறுதி செய்வது அரசின் பொறுப்பு. சமவாய்ப்பு, தரமான கல்வி மறுக்கப்பட்ட மாணவர்களின் நிலையை உணர்ந்தே கருத்து தெரிவித்தேன்.

தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைக் குறித்துச் சிறந்த கல்வியாளர்களுடன் உரையாடி தெளிவுபெற வேண்டும். மத்திய அரசும் அனைத்து தரப்பின் கருத்தைக் கேட்டறிந்து தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.