கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் கொசுக்களின் எண்ணிக்கையும் டெங்கு பாதிப்பும் மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினை காரணமாக தேங்கிய நீரில் டெங்கு கொசுக்கள் உருவாகி நோய் தொற்று ஏற்பட வழிவகை செய்கிறது. டெங்குவால் சென்னையில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளதாகவும் காய்ச்சலைத் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”சென்னை மதுரவாயலைச் சேர்ந்த 8 வயது ரோகித், முகப்பேர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 6 வயது மகாலட்சுமி ஆகிய 2 பச்சிளங்குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகியிருப்பது வேதனையும், அதிர்ச்சியும் அளிக்கிறது.கடந்த ஆண்டுகளில் டெங்கு காய்ச்சலுக்கு 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும், இந்த வருடம் அதிமுக அரசும், சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர்களும் டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உரிய காலத்தில் எடுக்கத் தவறிவிட்டனர். இந்த மோசமான போக்கின் விளைவாக, இரு குழந்தைகளின் உயிர்கள் சென்னையில் மட்டும் பறிபோயிருக்கிறது. இதுபோல் மற்ற மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலால் உயிர்ப் பலியும், பாதிப்பும் தொடருகிறது.

சின்னஞ்சிறு குழந்தைகள் டெங்கு காய்ச்சலுக்குப் பலியாகிக் கொண்டிருப்பதற்குக் காரணமாக இருக்கும் அரசின் அலட்சியத்திற்கும், மெத்தனத்திற்கும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் அரசு உடனடியாக டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக எடுக்க வேண்டும் என்றும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி உயிர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். கொடிய டெங்கு நோயிலிருந்து குழந்தைகளையும், மக்களையும் காப்பாற்றத் தேவையான போர்க்கால நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்திட வேண்டும் என்றும், பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று காத்திராமல், அரசின் மெத்தனமான போக்கை நன்றாக அறிந்துள்ள திமுக மருத்துவ அணியினரும் – ஆங்காங்கே டெங்கு காய்ச்சல், அதன் பாதிப்புகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.