மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து மற்றும் கடன் விவரங்களைத் தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியான புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ”மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சென்னை போயஸ் கார்டன் வீடு, கோட நாடு எஸ்டேட் என்று சுமார் 913 கோடி ரூபாய்க்கு மேலாக சொத்துகள் இருக்கின்றன. இந்த சொத்துக்கள் குறித்து ஜெயலலிதா உயில் ஏதும் எழுதிவைக்கவில்லை. அதனால், ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை உயர் நீதிமன்றம் நியமிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்ரல் 3) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் சொத்துக்களைப் பராமரிக்கத் தன்னை நிர்வாகியாக நியமிக்க கோரி அவரது சகோதரர் மகனான தீபக், தாக்கல் செய்த மனுவை, இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் எனக் கோரப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் சொத்துக்கள் மற்றும் கடன் விவரங்கள் குறித்த அறிக்கையை வரும் 25ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.