தமிழகம் முழுவதும் மக்களவை தேர்தல், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியலை இன்று (மார்ச் 29) மாலை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் ஒரு தொகுதிக்கும் வருகிற ஏப்ரல் மாதம் 18ஆம் தேதிக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதேபோன்று தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டமன்ற தொகுதிகளில் 18 சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் அன்றைய தினமே நடைபெறுகிறது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 19ஆம் தேதி முதல் 26ஆம் தேதி மாலைவரை வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இதில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை, 39 தொகுதிகளுக்கும் சேர்த்து 1,587 மனுக்கள் பெறப்பட்டன. இதில், 932 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 655 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக கரூரில் 43 பேரின் மனுக்களும், குறைந்தபட்சமாக நீலகிரி தொகுதியில் 10 பேரின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

சட்டமன்ற இடைத்தேர்தலில் 213 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 305 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. மேலும், புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தாக்கல் செய்யப்பட்ட 37 வேட்புமனுக்களில் 18 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, வேட்புமனுக்களை இன்று மாலை 3 மணிக்குள் திரும்பப் பெறலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இறுதி வேட்பாளர்கள் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 845 பேர் போட்டியிடுவதாகவும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் 269 பேர் போட்டியிடுவதாகவும் அவர் தெரிவித்தார். மாநில கட்சிகள் சார்பில் 36 பேரும், இதர கட்சிகள் சார்பில் 46 பேரும், சுயேட்சைகள் 187 பேரும் போட்டியிடுவதாக அறிவித்தார் சத்யபிரதா சாஹு.

தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மக்களவை தொகுதியில் 42 வேட்பாளர்களும், தென் சென்னையில் 40 வேட்பாளர்களும் போட்டியிடுவதாகத் தெரிவித்த சத்யபிரதா சாஹு, சுமார் 92 வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டதாக தெரிவித்தார்.