தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியை இன்று தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 26) தொடங்கிவைத்தார். இந்த விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், பேரவை தலைவர் தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கல்வி தொலைக்காட்சி செயல்படவுள்ளது. கல்வியாளர்களின் கலந்துரையாடல், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், நுழைவுத் தேர்வுகள் பற்றிய விளக்கங்கள் குறித்து இதில் ஒளிபரப்பப்படும். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் சுமார் 53 ஆயிரம் பள்ளிகளில் இந்த கல்வித் தொலைக்காட்சியை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

பள்ளி மாணவர்களுக்குப் பயன் அளிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளது. மழலையர் தொடங்கி முதல்நிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான நிகழ்ச்சி வரை ஒளிபரப்பாக உள்ளது. ஒழுக்கம், பெரியோர்களை மதித்தல், நேரம் தவறாமை, நற்பண்புகளைக் கொண்ட நல்ல கதைகளும் இந்த தொலைக்காட்சியில் இடம்பெறும்.

தமிழ், ஆங்கில மனப்பாட பகுதிகள், இசை மற்றும் பாடல்கள் மூலம் மாணவர்களுக்குக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் கல்வி தொலைக்காட்சியை அரசு கேபிள் டிவியில் சேனல் எண்.200இல் பார்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து, சென்னையில் முதல்முறையாக மின்சார பஸ்களின் சேவையை சோதனை முறையில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து, பெண்களின் பாதுகாப்புக்காக அம்மா ரோந்து வாகனத்தையும், போக்குவரத்து காவலர் சீருடையில் கண்காணிப்பு கேமரா வசதி பொருத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை இன்று தொடங்கிவைத்தார் முதல்வர்.