நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மத்திய அரசு.

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்காக கடந்த 2017ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில், இரு சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை மசோதா, தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை மசோதா என இரு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு ஒப்புதல் பெறக்கோரி பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர் பெற்றோர் சங்கம் சார்பில் 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறைகள் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன்பு இன்று (ஜூலை 6) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் தமிழக அரசின் சட்ட மசோதாக்களை மத்திய உள்துறை அமைச்சகம் பெற்றதாகவும், அவற்றை 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் குடியரசுத் தலைவர் நிறுத்தி வைத்ததாகவும் மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

மேலும், இரு சட்ட மசோதாக்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா என மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விளக்கம் கேட்டதற்கு, இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் பதிலளித்ததாக, மத்திய அரசு வழக்கறிஞர்கள் கூறினர்.

இதையடுத்து, இந்த சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாகத் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.