ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் தமிழில் பேசக்கூடாது என்ற உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அந்த உத்தரவில் மாற்றம் செய்துள்ளது தென்னக ரயில்வே.

சமீபத்தில் மதுரை திருமங்கலம் அருகே ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. ஆனால் உரிய நேரத்தில் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதுதொடர்பாக ரயில் நிலைய அதிகாரிகள் உள்பட மூவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் மொழிப் பிரச்சனையால் தகவல்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதைத் தவிர்க்க, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. மொழிப் பிரச்சனையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதைத் தவிர்க்க இந்தி அல்லது ஆங்கிலத்தில் தகவல்களை பரிமாறிக் கொள்ள தென்னக ரயில்வே ஆணை பிறப்பித்துள்ளது.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி, கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து தனது சுற்றறிக்கையில் மாற்றம் செய்துள்ளது தென்னக ரயில்வே. குழப்பம் ஏற்படாத வகையில் ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசலாம் என்று புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது தென்னக ரயில்வே.