சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக எம்.எல்.ஏக்கள் 13 பேரும் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று பதவியேற்பு செய்துகொண்டனர்.

தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, ஏழாவது கட்டமாக மே 19ஆம் தேதி 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், மக்களவை தேர்தலில் 37 தொகுதிகளை வென்று, திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. இதேபோல் சட்டமன்ற இடைத்தேர்தலில் 22 தொகுதிகளில் 13 இடங்களை திமுகவும், 9 இடங்களை அதிமுகவும் வென்றது. இதில், அதிமுக தனது ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதனால் ஆட்சி மாற்றம் ஏற்படாமல் போனது.

அதேசமயம், சட்டமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் தற்போது 101ஆக உயர்ந்துள்ளது. திமுக வேட்பாளர்கள் இன்று காலை 11 மணிக்கு எம்.எல்.ஏக்களாக பதவியேற்பார்கள் என்று சட்டப்பேரவை செயலகத்தில் திமுக தெரிவித்திருந்தது. அதன்படி, 13 திமுக எம்.எல்.ஏக்களும் இன்று (மே 28) சபாநாயகர் தனபால் அறையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.

பதவியேற்றுக்கொண்ட எம்.எல்.ஏ.க்கள்:

பூந்தமல்லி – ஆ.கிருஷ்ணசாமி
பெரம்பூர் – ஆர்.டி.சேகர்
திருப்போரூர் -எஸ்.ஆர். இதயவர்மன்
குடியாத்தம் (தனி) – எஸ். காத்தவராயன்
ஆம்பூர் – அ.செ. வில்வநாதன்
ஓசூர் – எஸ்.ஏ. சத்யா
திருவாரூர் – பூண்டி. கே. கலைவாணன்
தஞ்சாவூர் – டி.கே.ஜி. நீலமேகம்
ஆண்டிப்பட்டி – எ. லோகிராஜன்
பெரியகுளம் (தனி) – கே.எஸ். சரவணகுமார்
அரவக்குறிச்சி – வி. செந்தில்பாலாஜி
திருப்பரங்குன்றம் – பி. சரவணன்
ஓட்டப்பிடாரம் (தனி) – எம்.சி. சண்முகையா

அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் எப்போது பதவியேற்பார்கள் என்ற தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.