தீண்டாமை ஒரு பாவச் செயல், பெருங்குற்றம், மனித தன்மையற்ற செயல் என பாடப்புத்தகங்களில் பொறிக்கப்பட்ட வாக்கியம் வெறும் வாக்கியமாகவே இந்தியாவில் பல கிராமங்களில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்டவர்களின் மீது நிகழ்த்தபடும் கொடுமைகளும் அவர்களுக்கான மறுக்கபடும் சம உரிமையும் இன்னும் நடந்தேறிக்கொண்டுதான் இருக்கின்றன.

மங்களூரைச் சேர்ந்த சந்த்குரு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மக்கள் வழிபடும் பரமகலசோத்சவா கோவில் திருவிழா வருடாவருடம் நடைபெறுவது வழக்கம். அங்கு மேல்தட்டு மக்களின் கோபத்திற்கு ஆளான தாழ்த்தப்பட்ட மக்களைத் தனியாகப் பிரித்து கோவிலில் அமரவைத்த சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இதுகுறித்து தலித் அமைப்பு செயல்பாட்டாளர் சேகர் கூறுகையில், எல்லாமே நன்றாக போய்க்கொண்டிருந்தது அந்த மதிய நேரம் நெருங்கும் வரையில், கோவில் பாராமரிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள் சில மேல்தட்டு மக்களுக்காக தனியாக பிரிவை உருவாக்கிக்கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் மேல்தட்டு மக்களை சுலபமாக கண்டுபிடித்து அவர்களை தனியாக அமரச்சொன்னார்கள், மேல்தட்டு மக்கள் சட்டை அணியாமல் வருவார்கள், அதுவே தாழ்த்தப்பட்டவர்கள் சட்டை அணிந்து வருவார்கள். இந்த வேறுபாட்டைக்கொண்டு அவர்கள் இருபிரிவாக பிரித்து அமரச் சொன்னார்கள் இதற்கு அவர்கள் ‘பங்கி பேதா’ என்று பெயர் வைத்துக்கொண்டார்கள்.

எங்களின் முழு உழைப்பின் மூலம் உருவான ஒரு திருவிழாவில் எங்களை நடத்திய விதம் முறையற்றதாக இருந்தது. மேலும் எங்களுக்கு கோவில் குழு அமைப்பின் தலைவர் ஹரிஷ் பூஞ்சாவிடம் இருந்து முறையான அறிவிப்பு வந்தபிறகே நாங்கள் கோவில் திருவிழாவில் கலந்துகொண்டோம்.

மேலும் மேல்தட்டு மக்களுக்கு மட்டும் முறையான வாகன நிறுத்தங்கள், அவர்கள் இருக்கும் இடத்தில் அலங்கார பராமரிப்புகள் என்று அசுத்தம் இல்லாமல் இருந்தது.

இதைப்பற்றி ஹரிஷ் பூஞ்சாவிடம் கேட்டபோது அவர் அவ்வாறெல்லாம் இல்லை என்று மறுத்தார். மேலும் நாங்கள் உணவருந்தும் வேலையில் மட்டும் சாமியார்களுக்காக சில வசதிகளை செய்துகொடுத்தோம் அது வழக்கமாக கடைபிடிக்கப்படும் முறை என்றும் கூறினார்.