ஸ்வச் பாரத் – தூய பாரதம்! என்று நாடெங்கும் பல கோடிகள் செலவழித்து விளம்பரங்கள் செய்யப்பட்டன. இது தனது கனவுத் திட்டம் என்று மேடையெங்கும் முழங்கினார் மோடி. ஏற்கனவே விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடமிருந்து ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் சேவை வரிகளோடு 0.5% ஸ்வச் பாரத் வரியும் நவம்பர் 2014 முதல் அக்டோபர் 2016 வரை வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் ரூபாய் 9,851.41 கோடி ரூபாய் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. ஆனால் ஒரு RTI தகவலின்படி அரசு இத்திட்டத்தின் விளம்பரத்துக்காக மட்டும் 100 கோடிகள் செலவிட்டிருப்பது தெரியவருகிறது. மக்களை நோய்களிலிருந்து காக்கவும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் ஸ்வச் பாரத் வரி பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தது அரசு.

ஆனால் உண்மையில் நிலவரம் என்ன? சுகாதாரம் மேம்படுத்தப்பட்டதா? குஜராத் மாடலை விளம்பரப்படுத்தி ஆட்சியேறிய மோடி உண்மையில் தூய்மையான இந்தியாவை உருவாக்க நடவடிக்கைகள் எடுத்தாரா?

1993ம் ஆண்டு இந்தியாவில் மனிதக் கழிவை அகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக்கூடாது என்று தடை பிறப்பிக்கப்பட்டது. 2013ம் ஆண்டு அதனை மறு அமலாக்கம் செய்து, அவர்கள் மறுவாழ்வுக்கான சட்டத்தையும் இயற்றியது அரசு. இவை வெறும் ஏடுகளில் தான் இருக்கின்றனவே அன்றி நிஜத்தில் மாற்றம் நிகழ்ந்தபாடில்லை.

1992ம் ஆண்டே இந்தக் கொடுமைகளை ஒழித்துவிட்டோம் என்று குஜராத் அரசு மார்தட்டியது. ஆனால் 2013ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மனிதக் கழிவை மனிதர்களே அகற்றுவது கொஞ்சம் கூட குறையவில்லை என்று தெரிவிக்கிறது.

உத்தரபிரதேசம், பிஹார், குஜராத், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் Dry Toilets அதாவது மணலில் மலம் கழிக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அந்த மலக்கழிவை வெறும் கைகளால் அள்ளுகிறார்கள்.

2014ல் Human Rights Watch என்ற தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் உத்தரபிரதேசத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான மனித மலம் அள்ளும் மக்களை பேட்டி கண்டனர். அவர்களில் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பணியை இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் எஜமானர்களால் மிரட்டப்படுவதாகவும், பரம்பரை பரம்பரையாக இத்தொழிலை செய்து வருவதாகவும் தெரிவிக்கிறார்கள். இதில் பெருங்கொடுமை என்னவென்றால் அவர்களில் சிலர் படித்தவர்களாக இருந்தாலும் அந்த கிராம நிர்வாகிகள் அவர்களை மலம் அள்ளும் தொழிலுக்கே சேர்க்கப்படுகிறார்கள். காரணம் “சாதி”.

மலம் அள்ளும் சாதி என்று ஒடுக்கப்பட்டு இன்னமும்கூட அந்த பாதுகாப்பற்ற நாற்றமடிக்கும் செயலைச் செய்ய அவர்கள் தள்ளப்படுகிறார்கள். வெறும் இரண்டு ரொட்டித்துண்டுகளுக்காக சிலர் மலம் அள்ளுவது எத்தனை துயரமானது.

2011ம் ஆண்டு இந்திய அரசு நடத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் விவரங்கள் 2015ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதில் இலட்சத்துக்கும் அதிகமானோர் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரியவருகிறது. 1993 தடைக்குப் பிறகும் கூட இவ்வளவு பேர் இத்தொழிலில் ஈடுபட்டிருப்பது பேரதிர்ச்சிக்குரியது.

மறுவாழ்வுக்கான சட்டத்தை இயற்றி அதன்மூலம் 70000க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டதாக அரசு சொல்கிறது. ஆனால் அவற்றின் உண்மைத்தன்மை கேள்விக்குள்ளாகிறது.

நாட்டின் தலைநகரான டெல்லியில் 1993க்குப் பிறகு மட்டும் இந்தக் கழிவகற்றும் கொடுமையினால் இறந்தவர்கள் 77 பேர். கணக்கில் உள்ள எண்ணிக்கை 77 எனில் கணக்கில் வராதவர்கள்? இந்த எண்ணிக்கை பாதாள சாக்கடைகளில் இறங்கியும் விஷவாயு தாக்கியும் இறந்தவர்கள் தான்; எத்தனை ஆயிரம் பேர் இதன்மூலம் ஏற்படும் நோயினாலும் மன வேதனையினாலும் செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் எந்தக் கணக்கிலும் எடுத்துக்கொள்ளப்படும்? இறந்தவர்களில் 50% மேற்பட்டோருக்கு இன்னமும் இழப்பீடுகூட வழங்கப்படவில்லை.

கேரளா இதனை ஒழிக்க எந்திரங்களை அறிமுகப்படுத்தியது. டில்லியிலும் கழிவுநீர் தொட்டிகளைச் சுத்தம் செய்ய ரோபாட்களை களமிறக்கியது கெஜ்ரிவால் அரசு. ஆனால் அவை துரிதமாகப் பயன்படுத்தப்படுகின்றனவா?  மனிதர்கள் இச்செயலில் ஈடுபடாமல் இருக்கிறார்களா என்பதை எப்படிக் கண்காணிக்கப்போகிறார்கள்? ஏனென்றால் தமிழகத்திலும் கூட மனிதக்கழிவை மனிதரே அகற்றுவது தடை செய்யப்பட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் இன்னமும் பல இடங்களில் பல வீடுகளில், தொழிற்சாலைகளில் மனிதர்கள் இப்பணியில் ஈடுபட்டிருப்பதைக் கண்கூடாகக் காண்கிறோம்.

ஆக பிரதமரின் ஸ்வச் பாரத் திட்டம் என்ன செய்துகொண்டிருக்கிறது? பாஜகவினர் மனிதக் கழிவை அகற்றுவோர் கடவுளுக்குச் சமம் என்று பேசியுள்ளார்கள். பகிரங்கமாக மனிதக்கழிவை மனிதர் அகற்றுவதை ஆதரித்து இப்படிப் பேசும் அரசால் எப்படி தூய்மையான இந்தியாவை உருவாக்க முடியும்? ஸ்வச் பாரத் வரி 9000 கோடியை சுகாதாரத்துறை மேம்பாட்டிற்கு பயன்படுத்துவதாகச் சொன்ன அரசு இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிலிருந்து என்ன செய்தது? நோய்கள் பரவாமல் தடுப்போம் என்றார்கள். ஆனால் அவர்கள் ஆளும் மாநிலத்திலேயே கூட மலத்தை மனிதர்கள் கைகளால் அள்ளும் கொடுமை நிகழ்கிறதே? இன்னும் பல இடங்களில் இதற்கென்று நிறுவனங்கள் செயல்படுகின்றன. மலக்குழிகள், கழிவு நீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்ய ஆட்களை பிடித்துக்கொடுக்கும் நிறுவனங்கள் நாடெங்கும் இயங்குகின்றன.

அரசாங்கம் கண்துடைப்பாக இதனை செய்கிறது. சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே தீரக்கூடிய பிரச்சனையா இது? சட்டத்தை அமல்படுத்த இதற்கென்று பிரத்யேகத் துறையை உருவாக்க வேண்டும். இதனால் பாதிக்கப்பட்டோருக்கு முதல் தேவை – மருத்துவ உதவி. அவர்களுக்கான கல்வி வழங்கப்பட்டு “Right to dignified life” – கௌரவமாக வாழும் உரிமைஎன்று அரசியல் சாசனம் Article 21 சொல்கிறது. “Right to education” – கல்வியை அடிப்படை உரிமையாக்கியிருக்கிறது அரசு. ஆனால் அது ஒரு சாராருக்கு மறுக்கப்பட்டிருப்பது கண்கூடாகத் தெரிகிறது. அதனடிப்படையில் மக்களை இப்பணிக்குக் கட்டாயப்படுத்தியவர்களைச் சகமனிதனின் அடிப்படை உரிமைகளைப் பறித்த குற்றத்திற்காகத் தண்டிக்க வேண்டும். ஆனால் அரசே உடந்தையாகச் செயல்படும்போது? மக்களாகிய நாமும் கண்மூடிச் சென்றுவிடும்போது?

உலகின் மிக நீளமான சேவையான இந்திய ரயில்வேயில் தண்டவாளமுள்ள இடமெல்லாம் மலம் சிதறிக்கிடந்தன. தடைச்சட்டம் இயற்றிய அரசாங்கமே, அதனை அள்ளிச் சுத்தம் செய்ய மனிதர்களை நியமித்ததே. சில மாதங்கள் முன்பு தான் ரயில்வேயில் பயோ டாய்லெட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒருவழியாக ரயில்வே தண்டவாளங்களில் துப்புரவுப் பணிகள் செய்தோருக்கு ஒரு நிம்மதி கிடைத்துள்ளது. ஆனாலும் இது மிகத் தாமதம்.

அறிவியல் உச்சம்தொட்ட இந்தக் காலத்தில் இந்தக் கொடுமைகள் நடக்கின்றன. படித்த இளைஞர்கள் – குறிப்பாக இஞ்சினியர்கள், மருத்துவர்கள் இதனை ஒழிக்க பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், ஒரு சமூகப் புரட்சியை போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்; அது இனிவரும் எவருக்கும் அச்சமூட்டிட வேண்டும்.ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்ட தமிழ் – உணர்வெழுச்சி  போல இப்போது மனித உணர்வெழுச்சி ஒன்றை நிகழ்த்த இளையோர் தயாராக வேண்டும்.

“தீண்டாமை ஒரு பாவச் செயல்” என்று புத்தகங்களில் படிக்கிறோம் ஆனால் இன்னமும் மனிதக்கழிவை அள்ள தனிச்சாதியை வைத்துள்ளோம்.

Reference:

https://blog.nextias.com/sewer-deaths-in-india

http://www.newindianexpress.com/cities/delhi/2019/jan/12/50-per-cent-cases-in-delhi-did-not-receive-compensation-data-1924271.html

https://timesofindia.indiatimes.com/city/delhi/77-deaths-since-1993-ban-on-manual-scavenging/articleshow/59961904.cms

https://www.rt.com/news/438920-india-sewer-worker-deaths/

https://indianexpress.com/article/opinion/editorials/towards-dignity-manual-scavenging-aap-delhi-government-5609338/

http://www.dalits.nl/manualscavenging.html

https://counterview.org/2019/02/21/manual-scavenging-social-exclusion-of-past-even-today-play-crucial-role-indias-sanitation-outcome/

http://in.one.un.org/page/breaking-free-rehabilitating-manual-scavengers/

https://www.hrw.org/news/2014/08/25/india-caste-forced-clean-human-waste

https://www.rediff.com/news/report/rediff-labs-manual-scavenging-a-national-shame/20170712.htm

https://www.ndtv.com/india-news/nearly-100-crore-bill-for-swachch-bharat-ads-reveals-rti-780220

https://swachhindia.ndtv.com/gst-impact-on-swachh-bharat-abhiyan-abolition-of-swachh-bharat-cess-and-high-tax-rates-on-sanitation-products-9319/

https://www.hindustantimes.com/india/services-to-attract-0-5-swachh-bharat-cess-from-november-15/story-oEEmzrPFb75fJstQmQmJWN.html