பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் விதி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லையெனக் காங்கிரஸ் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.பியும், மகிளா காங்கிரஸ் தலைவருமான சுஷ்மிதா தேவ் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பிரதமர் மோடி, பாஜகவின் மூத்த தலைவர் அமிர்ஷா உள்ளிட்ட பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ராணுவத்தைத் தங்களுடைய கட்சிக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

“இந்திய ராணுவம் எந்தவொரு தனிநபருக்கும் சொந்தமானது அல்ல. ராணுவ வீரர்கள் நாட்டைக் காக்கும் சேவையைச் செய்துவருகின்றனர். ஆதலால் ராணுவத்தை யாரும் சொந்தம் கூடாது.” எனத் தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் கூறியதை பாஜகவினர் பொருட்படுத்தாமல் மீண்டும் ராணுவ வீரர்களின் செயல்களைத் தங்களுடைய கட்சிக்காக விளம்பரபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதைத் தேர்தல் ஆணையமும் கண்டும்காணமல் இருக்கிறது. எனவே, பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார் சுஷ்மிதா தேவ்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. இதைதொடர்ந்து, இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது.