ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி, அவரது மகள் திருமண ஏற்பாட்டிற்காக பரோல் கோரும் வழக்கில் அவர் நேரில் ஆஜராகி வாதிட அனுமதிப்பதில் தமிழக அரசுக்கு என்ன சிக்கல்? என்று கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சுமார் 25 வருடங்களுக்கும் மேலாகச் சிறையில் இருக்கும் ஏழுபேரில் ஒருவர் நளினி. வேலூர் சிறையில் 27 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, லண்டனில் வசிக்கும் தன் மகள் ஹரிதாவின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க ஆறு மாதங்கள் பரோல் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாகத் தமிழக அரசு இன்று (ஜூன் 11) பதிலளிக்குமாறு உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கில் நளினி நேரில் ஆஜராகி வாதிட விரும்புவதால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தமிழக அரசுக்கும், சிறைத் துறைக்கும் உத்தரவிடக் கோரியும் நளினி தரப்பில் கோரப்பட்டுள்ளது. இதற்கு நளினியை நேரில் ஆஜர்படுத்துவதில் பாதுகாப்பு பிரச்சினைகள் இருப்பதாகத் தமிழக அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது.

இதைக்கேட்ட நீதிபதிகள், விசாரணையில் மனுதாரர் வாதிடுவதைத் தடுக்க முடியாது என்று கூறினர். மேலும், நளினியை நேரில் ஆஜர் படுத்துவதில் என்ன பிரச்சினை உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து, தமிழக அரசிடம் கேட்டுத் தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.