நாடுமுழுவதும் சுமார் 3 கோடி முஸ்லீம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து காணவில்லை என்றும் இதில் பாஜக அரசு மிகப்பெரிய சதி செய்திருக்கிறது என்றும் ஜனதா தளத்தின் தேசிய பொதுச் செயலாளர் பி.ஜி.கோல்சே பாட்டீல் தெரிவித்துள்ளார்.

மகராஷ்டிராவில் கிட்டதட்ட 40 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வாக்களர் பட்டியலில் இருந்து காணவில்லை என ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாக கோல்சே பாட்டீல் தெரிவிக்கிறார். “39 லட்சத்து 27 ஆயிரத்து 882 வாக்காளர்களின் பெயர் வாக்காளார் பெயர் பட்டியலில் இல்லை. இதில், 17 லட்சம் வாக்காளர்கள் தலித் சமூகத்தினரும், 10 லட்சம் முஸ்லீம் வாக்காளர்களும் அடங்குவர். இது அரசியல் ஆதாயங்களுக்கான பாஜகவின் சதித்திட்டமாகும்” என மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான கோல்சே பாட்டீல் தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய கணக்கெடுப்பின்படி, மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 39 லட்சத்து 27 ஆயிரத்து 882 பேர் அல்லது 4.6 சதவீத வாக்காளர்கள் வாக்காளர்பட்டியலில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கிறது. ஐடி பொறியாளரும், வோட்டர் ஆப்பிள் நிறுவனருமான காலித் சாய்புல்லா என்பவர்தான் வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகள் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டசபை தொகுதிகளில் 69 தொகுதிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மகாராஷ்டிராவில் மட்டும் இந்தநிலை என்றால், நாடு முழுவதும் சுமார் 12 கோடியே 70 லட்சம் வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதில், முஸ்லீம் வாக்களர்கள் மட்டும் சுமார் 3 கோடி பேர் உள்ளதாக தெரிவிக்கிறார் காலித் சாய்புல்லா.

இந்த மிகப்பெரிய தவறை சரிசெய்வதற்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. தேர்தல் ஆணையம் இந்த குறைகளை சரிய செய்யவேண்டும் என பாட்டீல் தெரிவித்தார். மேலும், வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்கள், அவர்களை பற்றிய விவரங்கள், தெருக்களில் உள்ள வீடுகளின் எண்ணிக்கை மற்றும் வீட்டில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை என அனைத்து புள்ளிவிவரங்களும் வோட்டர் ஆப்பில் உள்ளதாக காலித் சாய்புல்லா தெரிவித்துள்ளார்.