நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர் என போபால் தொகுதி பாஜக வேட்பாளர் சாத்வி பிரக்யாசிங் தாகூர் கூறியதற்கு பாஜக தரப்பில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் சாத்வி பிரக்யா தாக்கூர். எப்போதும் காவி உடையில் இருக்கும் இவர், சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நாடு முழுவதும் அவரை பிரபலபடுத்தியது. “பசு மாட்டின் சிறுநீராலும், பஞ்சகவ்யம் கலவையான ஆயுர்வேத மூலிகைகள்தான் என் மார்பக புற்றுநோயைக் குணமாக்கியது” என்று அப்படியொரு, அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் சிகிச்சை முறை ஒன்றை கூறினார் சாத்வி பிரக்யா.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் சமீபத்தில் அரவக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து. அவர் பெயர் கோட்சே.” என்று பேசியுள்ளார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்த கருத்துக்கு நாடு முழுவதும் பலர் கண்டனங்களும், சிலர் ஆதரவுகளும் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, கமலின் மீது காவல் நிலையத்தில் புகார்களும், நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடர்பட்டுள்ளன. இதன்காரணமாக கமலஹாசன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக இதுதொடர்பான கருத்துகள் ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், மகாத்மா காந்தியை கொலை செய்த ”நாதுராம் கோட்சே ஒரு தேசபக்தர்” என்று ஏஎன்ஐ அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார் சாத்வி பிரக்யா. மேலும், “ கோட்சே ஒரு தேச பக்தராகவே இருக்கிறார், இருப்பார். அவரை தீவிரவாதி என்று கூறியதற்கு இந்த தேர்தலில் தக்க பதிலடி கொடுக்கப்படும்.” எனத் தெரிவித்தார். பிரக்யாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எதிர்கட்சிகளும், மற்ற அரசியல் கட்சிகளும் இந்த கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும்முன், பாஜகவே இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

கோட்சே குறித்து பிரக்யா சிங் கூறிய கருத்தில் பாஜகவிற்கு உடன்பாடு இல்லை என்றும் தனது கருத்துக்கு பிரக்யா சிங் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.

சாத்வி பிரக்யாவை பாஜக வேட்பாளராகக் கட்சித் தலைமை அறிவித்ததிலிருந்து, சர்ச்சைக்குரிய கருத்துகள் பல கூறிவருவதும், அதற்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு தெரிவிப்பதும் தொடர்ந்து, நடந்துகொண்டே இருக்கிறது. கட்சி தலைமை பலமுறை சாத்வி பிரக்யாவை எச்சரித்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2008 மேலகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம்சாட்டபட்டு சிறையிலிருந்த சாத்வி பிரக்யா ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பின்னர், போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளராகச் சாத்வி பிரக்யாவை பாஜக அறிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.