தமிழகம், புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான அனைத்து கட்சிகளின் தேர்தல் பரப்புரைகள் இன்று (ஏப்ரல் 16) மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் நாளை மறுநாள் (ஏப்ரல் 18) நடைபெற உள்ளது. அதேபோலத் தமிழகத்தில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைதேர்தலும் ஏப்.18இல் நடைபெறவுள்ளது. இன்று மாலை 6 மணியோடு தேர்தல் பிரச்சாரங்கள் செய்யத் தடைவிதிக்கப்பட்ட நிலையில், இறுதிகட்ட பிரச்சாரங்கள் அனல் பறக்க நடைபெற்றது.

தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை நிறைவடைந்ததையடுத்து தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். அத்துடன் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட வெளி ஆட்கள் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

மக்களவை தேர்தலையொட்டி புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இன்று மாலை 6 மணி முதல் ஏப்.19ஆம் தேதி காலை 9 மணிவரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் எனத் தெரிவித்தார் மாவட்ட ஆட்சியர் டி.அருண்.