5.இருண்ட காலத்தின் குறிப்புகள்

அமெரிக்க அரசிற்கும் தாலிபான்களுக்குமிடயே புரிந்துணர்வு ஒப்பந்தம் (?) எட்டப்பட்டு ஆப்கானிஸ்தானைவிட்டு அமெரிக்க துருப்புகள் வெளியேற இருக்கின்றன. இரண்டு மரணவியாபாரிகளிடையே எந்தவிதமாக திடீரென புரிதல் ஏற்பட்டது என்பதுதான் யாருக்கும் புரியவில்லை. இதில் நடுவே ஆப்கன் அரசிற்கும் தலிபான்களுக்கும் இடையே என்ன புரிதல் ஏற்படப்போகிறது என்பதும் புரியவில்லை..

இருப்பினும் அமெரிக்க அரசின் நிதிப்பற்றாக்குறை கையாளமுடியாத அளவில் செல்கிறது என்பதை சமீபகாலமாக அமெரிக்காவின் வெளியுறவு நகர்வுகளை கொண்டு யூகிக்கமுடிகிறது. அதன் ராணுவச் செலவினங்கள் கைமீறி போய்க்கொண்டிருப்பதைக் கட்டுப்படுத்தியாக வேண்டியது தவிர்க்க இயலாத ஒன்றாக இருக்கிறது. சில மாதங்கள்முன் சிரியாவிலிருந்து அமெரிக்க துருப்புகள் திரும்பப்பெறப்பட்டன. அல்பசாரின் சிரிய ராணுவம், ஐ.எஸ் அமைப்பு மற்றும் துருக்கி இடையே சிக்கிக்கொண்ட தன்னை நம்பியிருந்த குர்திஷ் மக்களைக் கைகழுவிவிட்டு அமெரிக்கா இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இந்த முடிவை எடுத்தபோது சிரியாவின் வீதிகளில் இருந்த அமெரிக்க படைவீரர்கள் மீது குர்துக்கள் அழுகிய முட்டைகளையும் ஆபாச வசைச்சொற்களையும் வீசி தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தினர்.. இந்நடவடிக்கைகள் அவர்களின் கையறுநிலையை உணர்த்தியது. பல்லாயிரம் உயிர்களை பலிகொண்ட அதற்கு இணையான எண்ணிக்கையிலான மக்களை அகதிகளாக்கிய இந்தப் போர்கள் சாதித்தது என்ன என்பதற்கு இந்த நிமிடம்வரை விடை இல்லை.

எந்தப் புரிந்துணர்வு சிரியா அரசு மற்றும் ஐ.எஸ். அமைப்பு ஆகியவற்றுடன் எட்டப்பட்டது.? தன்னை நம்பிய குர்திஷ் மக்கள் மற்றும் புரட்சிப்படையின் நிலை என்னவாகும் என்பதுபற்றி எந்த உத்திரவாதமும் இன்றி இவ்வெளியேற்றம் நிகழ்ந்திருக்கிறது. சொல்லி வைத்தாற்போல் அமெரிக்கத் துருப்புகள் வெளியேறிய மறுவிநாடி துருக்கி குர்திஷ் பகுதிகள் மீது தாக்குதலை நடத்தியது. சமீபத்திய தோல்விகளால் வீழ்ந்திருந்த தனது செல்வாக்கை மீட்க இந்த குர்திஷ்க்கு எதிரான உடனடி தேசியவாதம் துருக்கி அதிபர் எர்டோகனுக்கு உதவியது. நெருக்கடியிலிருந்த அவருக்கு அமெரிக்கா வெளியேற்றத்தை ‘அப்பாடா..’ என ஆசுவாசமாக உணர்ந்திருப்பார்..

சிரியா மற்றும் ஆப்கன் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் முடிவு அதிபர் தேர்தல் வருவதற்கு ஒருவருடத்திற்குள்ளாக எடுக்கப்பட்டிருக்கிறது.. அமெரிக்காவில் சிவில் சமூகத்தில் கொப்பளித்துக்கொண்டிருந்த தேசியவாதம் மெல்ல வடிந்து வருவதையும் அதன் பொருளாதாரம் அத்தனை நன்றாக இல்லை என்பதையும் யூகிப்பது ஒன்றும் சிரமமானதல்ல. ஆக்கிரமிப்பதும் வெளியேறுவதும் அமெரிக்காவின் அதிகார மற்றும் வணிக நலன்களைத்தவிர வேறுகாரணிகள் தேவையில்லை என்பதே நாம் உடனடியாகப் புரிந்துகொள்ள வேண்டியது.

பொருளாதார நெருக்கடிகள் அமெரிக்க சிவில் சமூகத்தை நெருக்கும் இந்த நேரத்தில் மக்கள்நல பொருளியல் மற்றும் ராணுவ செலவினங்களுக்கு எதிராக பேசிவரும் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் முன்னிலை வகிக்கும் பெர்னி சாண்டர்ஸ்க்கு கிடைக்கும் வரவேற்பு ட்ரம்பிற்கு வயிற்றில் புளியைக் கரைத்திருக்கக்கூடும்.. காஷ்மீர் பிரச்சனையில் மத்தியஸ்தம் செய்ய தயாராய் இருப்பதாக அகமதாபாத்தில் வைத்தும்கூட ட்ரம்ப் பேசியிருப்பது சமாதான தூதராக தனக்கான புதிய அடையாளத்திற்காக ஆளாய் பறப்பதை உணர்த்துகிறது.

வெள்ளை இனவாதத்தை உள்ளீடாகக் கொண்ட தேசியவாதம், தன்னை உறுதியான ராணுவவாத தலைமை என்கிற சுய விளம்பல் ஆகியவை இனியும் கைகொடுக்கும் ஆயுதங்கள் அல்ல என்பதை அவரும் அவரின் தேர்தல் மேலாண்மை குழுவும் உணர்ந்திருக்கிறார்கள். எனவே தன்னை ஒரு போர்வீரன் வேடத்திலிருந்து விடுவித்து நல்ல வியாபாரி என்கிற பிம்பத்திற்குள் சொறுகிக்கொள்ள அவர் முடிவெடுத்திருக்கிறார். எனவே சீனாவுடன் சமீபத்தில் ஏற்படுத்திக்கொண்ட வணிக ஒப்பந்தங்களில் கறாராக நின்றதுபோல காட்டிக்கொண்டார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான அச்சத்தால் சீனாவின் வளர்ச்சி விகிதம் 12%லிருந்து 6% ஆக வீழ்ந்திருக்கும் சூழலில் சீனா சற்று இறங்கிவந்திருப்பதை தனக்குச் சாதகமாக அவர் பயன்படுத்திக்கொண்டார்.
இந்திய வருகைக்கும் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஆயுதக் கொள்ளளவு ஒப்பந்தமே முக்கிய நோக்கமாக இருந்தது.. வர்த்தகரீதியாக இந்தியாவிற்கு எதிராக விதிக்கப்பட்ட எஃகு மற்றும் அலுமினியப்பொருட்கள் மீதான கூடுதல் இறக்குமதி வரிகள், மற்றும் எச் 1 பி விசாக்கள் வழங்குவதில் எந்த நெகிழ்வும் இல்லாமை, வணிகம் செய்ய உகந்த நாடு என்கிற தகுதியிலிருந்து இந்தியாவை நீக்கியது, ஆகிய நடவடிக்கைகள் பற்றி சாதகமாக எந்த மாற்றத்தையும் எட்டாமல் முடிவு பெற்றது இப்பயணம்.
வழக்கம்போல இந்தியாவின் பிரதமரான சுற்றுலா வழிகாட்டியும், அவரின் அடிப்பொடிகளும் ‘நமஸ்தே ட்ரம்ப்’ எனப் புளங்காகிதம் அடைந்தாலும் அவர் காரியத்திலயே கண்ணாயிருந்தார். அமெரிக்க ராஜதந்திரிகள் இம்மி பிசகாமல் அவரை வழிநடத்தினார்கள்! அமெரிக்க அதிபருடன் வருவதாயிருந்த அரசின் வணிக பிரதிநிதி ராபர்ட் ஜெத்திகர் கடைசி நேரத்தில் வராமல் கழன்று கொண்டார் என்பதால் வழக்கமாக மோடிக்கு வால்பிடிக்கும் ஏற்றுமதி வர்த்தகர்கள் உற்சாகமின்றி இருந்ததும், பங்குச்சந்தைகள் தள்ளாடிக்கொண்டிருந்ததும் இப்பயணம் நமக்கு வர்த்தகநோக்கில் தம்பிடி பிரயோஜனமில்லை என்பதன் சமிக்கைகள்.

இந்த களபேரத்தில் சத்தமின்றி சாதித்து வருபவர் ரஷ்ய அதிபர் புடின். பனிப்போருக்கு பிந்தைய உலகின் துருவ அரசியலில் ரஷ்யா இழந்த இடத்தை மீண்டும் பிடிக்கும் முனைப்பில் அவர் பெரியளவில் முன்னேறியிருக்கிறார். சிரியா மற்றும் ஆப்கனில் அமெரிக்காவின் வெளியேற்றமும் துருக்கியுடன் அவர் ஏற்படுத்திக்கொண்ட நட்பும் மத்திய கிழக்கிலும் மேற்கு ஆசியாவிலும் ரஷ்யாவின் பிடியை வலுவாக்கியிருக்கின்றன. ராஜந்திரரீதியில் இது ரஷ்யாவிற்கு சாதகம்தான் என்றாலும் பொருளாதாரரீதியில் சீனா பெற்றுள்ள வலிமை அதன் பழைய பொற்காலம் அருகில் இல்லை என்பது அவருக்குக் கசப்பான உண்மையும்கூட. ஆனால் தனிப்பட்டமுறையில் உலகின் வலிமையான தலைவர் என்பது புதினுக்கே பொருந்தும்.. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின்கரங்கள் இருந்ததாக ஹிலாரி முன்வைத்த குற்றச்சட்டு ஏறத்தாழ உண்மை என்பது பின்னர் வெளியான தகவல்களால் உறுதிப்பட்டது. ரஷ்யாவின் கரங்கள் என்பது துல்லியமாக விளாடிமீர் புதினின் கரங்கள்தான். அவை இன்னும் எங்கெல்லாம் நீண்டிருக்கிறது. நீள இருக்கிறது.. என்பதே சர்வதேச அரசியல் நோக்கர்களின் கேள்வி.

முந்தைய தொடர்கள்:

4. ஜனநாயகன் பிரேமச்சந்திரன் – https://bit.ly/33voFTn
3. காதலெனும் பகல் கனவு – https://bit.ly/3b9RZ4s
2. சாண் ஏறிய தமிழும்..! முழம் சறுக்கிய ஆதீனமும்..!- https://bit.ly/2WsCn8i
1. சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் – https://bit.ly/2TZVRzg

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தூய்மைப்பணியாளர்கள் மீதான போலி நன்றியுணர்வு-இரா.முருகானந்தம்
  2. ஊரடங்கு நெருக்கடியும், உலகளாவிய நெருக்கடியும்- இரா.முருகானந்தம்
  3. அரசியல் நோயும்! நோயின் அரசியலும்! - இரா.முருகானந்தம்
  4. ஜனநாயகன் பிரேமச்சந்திரன் - இரா.முருகானந்தம்
  5. காதலெனும் பகல் கனவு - இரா.முருகானந்தம்
  6. சாண் ஏறிய தமிழும்..! முழம் சறுக்கிய ஆதீனமும்..! - இரா.முருகானந்தம்
  7. சிறப்பு வேளாண் மண்டலம் எனும் நாடகம் - இரா.முருகானந்தம்