ஹரியானா மாநிலம், கூர்கான் பகுதியைச் சேர்ந்த தாமாஸ்பூர் கிராமத்திலுள்ள ஒரு வீட்டினுள் அத்துமீறி நுழைந்த ஒரு கும்பல் அங்கிருந்த அனைவரையும் இரும்பு கம்பியால் தாக்க ஆரம்பிக்கிறது, ‘அய்யோ… அம்மா… அல்லா…’ என்று அலறும் சத்தம் காதை கிழிக்கிறது. அந்த கும்பல் மேலும் தன் மூர்க்கத்தினால் அசைவற்று கிடக்கும் ஒருவனை கருணையற்று அடித்துக்கொண்டே இருக்கிறது. இந்தக் காட்சிகள் காணொளியாக சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் பதட்டப்படச் செய்திருக்கிறது.

தாமாஸ்பூர் கிராமத்தில் ஒரு வறண்ட பகுதியில் ஹோலி பண்டிகை அன்று கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்களை ‘இப்பகுதி உங்களுக்கானது அல்ல; நீங்கள் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள்; அங்குபோய் விளையாடுங்கள்’ என்று மிரட்டி அவர்கள் விளையாட்டை நிறுத்தச் செல்லி சிலர் ரவுடித்தனம் செய்கின்றனர். அவர்கள் செல்ல மறுத்தவுடன் மேலும் சிலரை அழைத்துக்கொண்டு ஒரு கும்பலாக வந்து அவர்கள் தங்கியிருக்கும் வீட்டுக்குள் நுழைந்து தாக்க ஆரம்பிக்கின்றனர்.

சம்பவம் நடந்த 40 நிமிடம் கழித்து போலீஸார் அங்கு செல்கின்றனர். அவர்கள் வருவதற்குள் மொத்த அட்டூழியங்களையும் அந்தக் கும்பல் அரங்கேற்றிவிட்டு 25 ஆயிரம் பணத்தையும் சூறையாடிச் சென்றிருக்கிறது.

இதுபற்றி பாண்ட்சி போலீஸார் கூறுகையில், “நாங்கள் அந்தக் கும்பல் மீது கொலை முயற்சி மற்றும் அதுதொடர்பான வழக்குகளைப் பதிவுசெய்துள்ளோம். மேலும் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவை வைத்து ஆறு பேர்களை கைதுசெய்துள்ளோம்” என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில் இந்த வீடியோவை பார்த்து, நடந்த சம்பவத்திற்கு எதிராக பலர் தங்களின் கோபத்தை சமூக வலைதளங்களில் பதிவுசெய்து வருகின்றனர்