மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் நடத்திய பணப்பட்டுவாடா கண்காணிப்பில் தமிழகத்தில் மட்டும் ₨107.34 கோடி மதிப்பிலான பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி  மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவும் மற்றும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்து வருகிறது. பல சுயேட்சை  வேட்பாளர்களும் களத்தில் இறங்கி போட்டிபோட்டு பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.  இதனையடுத்து கட்சிகள் பணப்பட்டுவாடாவையும் ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மார்ச் 25 வரை  நாடு முழுவதும் நடத்திய சோதனையில் தமிழகத்தில்தான், அதிகமாக கணக்கில் வராத பணம் மற்றும் பொருட்கள் பட்டுவாடாச் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை மொத்தம் ரூ.107.34 கோடி மதிப்பிலான பணம், நகைகள் மற்றும் பிற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.  தமிழ்நாட்டுக்கு அடுத்து உத்தரப் பிரதேசம் (ரூ.104.53 கோடி), ஆந்திரப் பிரதேசம் (ரூ.103.4 கோடி) மற்றும் பஞ்சாப் (ரூ.92.8) ஆகிய மாநிலங்களில் அதிக அளவு பணம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 


மொத்தம் 143.47 கோடி ரூபாய் ரொக்கமாக கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.89.64 கோடி மதிப்பிலான மது பானங்கள், ரூ.131.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.162.93 கோடி மதிப்பிலான தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகப் பொருட்கள் மற்றும் ரூ.12.202 கோடி மதிப்பிலான பிற பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.539.992 கோடி மதிப்பிலான பணமும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.