பணமதிப்பிழப்பு தோல்வி என்பதற்கு இதோ மற்றுமொரு நிரூபணம். பணமதிப்பிழப்பு நிகழ்ந்த ஆண்டிற்கு முன் வரி கட்டியிருந்தாலும் அதை செயல்படுத்திய ஆண்டில் வரி காட்டாதவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்ததாக ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது. 2015-16 இல் 8.56 இலட்சம் பேர் வரி கட்டாதவர்களாக இருந்தது 2016-17 இல் 88.04 இலட்சமாக அதிகரித்துள்ளது.

2000-2001 க்குப் பிறகு இந்த அளவு வரி கட்டாதவர்களின் எண்ணிக்கை உயர்ந்ததில்லை என வருமான வரி அதிகாரிகள் அப்பத்திரிக்கைக்கு  தெரிவித்தனர். வருமான வரி தாக்கல் செய்யாதவர்களின் எண்ணிக்கை 2013 இல் இருந்து படிபடியாக குறைந்திருந்தது. 2013-2014 இல் 37.54 இலட்சமாகவும் 2014-2015 இல் 27.02 இலட்சமாகவும் 2015-2016 இல் 16.32 இலட்சமாகவும் இருந்தது. இதில் வரி கட்டுபவர்களில் இறந்துபோனவர்கள்  பான் கார்ட் தொலைத்தவர்கள் அல்லது திருப்பிக் கொடுத்தவர்கள் சேர்க்கப்படவில்லை.

இந்த அளவு  வரி தாக்கல் செய்யாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பணமதிப்பிழப்பு நடவைக்கையின் விளைவாக உருவான வருமான வீழ்ச்சி மற்றும் வேலையின்மை தான் காரணம் என பெயர் குறிப்பிட விரும்பாத வருமான வரித்துறை அதிகாரிகள் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கைக்கு தெரிவித்தனர்.

மத்திய நேரடி வரிகள் வாரியம்(CBDT), வரி தாக்கல் செய்யாதவர்கள் பற்றி கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

கிட்டதட்ட 1.75 கோடி பேருக்கு டி‌டி‌எஸ்/டி‌சி‌எஸ் கழிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் தங்கள் கணக்கை தாக்கல் செய்யவில்லை என மத்திய நேரடி வரிகள் வாரியம் CBDT தெரிவித்தது. இதில் பெரும்பான்மையான மக்களுக்கு வரி தாக்கல் செய்யும் அளவுக்கு வருமானம் வரவில்லை.  

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மக்கள் வரி தாக்கல் செய்வதை அதிகாரிக்கும் என்றும் ஏறத்தாழ 1.06 கோடி புதிய வரி கட்டுபவர்கள் 2016-2017 இல் அதிகரித்துள்ளதாக பாஜக அரசு பலமுறை கூறியது.

ஆனால் அதிகாரிகள் 25% வரிசெலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்தது உண்மை தான். ஆனால் இங்கு ஒரு விஷயம் கவனிக்க வேண்டும். CBDT 2016 இல் டி‌டி‌எஸ்/டி‌சி‌எஸ் (TDS/TCS) தாக்கல் செய்து வரி கழிக்கப்பட்டவர்களையும் வரி செலுத்தியவர்களாக கணக்கில் கொண்டது. அவர்களால் அரசுக்கு ஏதும் வருமானம் வரவில்லை. ஆனால் பாஜக அரசு இதை திரித்து சொன்னது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை எவ்வளவு பெரிய தோல்வி என்பதை பல்வேறு சம்பவங்களும், அறிஞர்களும், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களும் ஏன் பாஜகவின் மனசாட்சியே ஒப்புக்கொண்டாலும் கூட பாஜக அதை இன்று வரை முட்டுக்கொடுப்பது பரிதாபமாக உள்ளது.