பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை கைது செய்ததற்காக அதிருப்தி தெரிவித்து உச்ச நீதிமன்றம், உத்தரப் பிரதேச அரசை கடுமையாக சாடியுள்ளது.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் அலுவலகத்துக்கு வெளியே கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் ஒருவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, ஒருவருடத்திற்கு முன்புதான் வீடியோ கால் மூலம் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தன்னோடுவாழ விருப்பமா என்று கேட்டதாகவும் அந்த வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறினார்.

இந்த வீடியோ காட்சியை டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் பிரஷாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். இதையடுத்து கனோஜியாவிற்கு எதிராக லக்னோவில் உள்ள ஹஸ்ராத்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதைதொடர்ந்து, கனோஜின் கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் அவரது மனைவி. இந்த வழக்கை இன்று விசாரிக்கப்பட்டது.

அப்போது பத்திரிகையாளர் கைதுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், உத்தரப் பிரதேச அரசை கடும் விமர்சனம் செய்துள்ளது. மேலும் அடுக்கடுக்கான கேள்விகளை உத்தரப் பிரதேச அரசுக்கு எழுப்பிள்ளது.

‘எந்த அடிப்படையில் பத்திரிகையாளரை கைது செய்தீர்கள்? கைது செய்ததை சரியானதாகக் கருதுகிறீர்களா? கொலைக்குற்றம் செய்துவிட்டாரா? அவதூறு வழக்கிற்காக நீதிமன்ற காவலில் வைக்க அவசியம் என்ன?’ என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், லக்னோ மாஜிஸ்திரேட் தவறான உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என்றும் தெரிவித்தனர்.

ஒவ்வொரு தனிநபருக்கும் தனது கருத்தைச் சுதந்திரமாகத் தெரிவிக்க உரிமையுள்ளது என்று கூறிய நீதிபதிகள், சில நேரங்களில் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவைதான் அதற்காக கைது செய்வீர்களா? எதற்கெடுத்தாலும் கைது நடவடிக்கை எடுப்பீர்களா? என்று உத்தரப் பிரதேச அரசை கடுமையாகச் சாடினர்.