12 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் அளிக்கப்படும் என்ற பிரதமரின் விவசாய நிதி திட்டத்தை விவசாயிகளின் தலைவர்கள் நிராகரித்துள்ளனர். இது நாட்டில் நிலவும் விவசாய நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்கு “பயனற்றது” என்று கூறினார்கள்.

விவசாயிகள் பிரச்சனைப் பற்றி விவாதிக்க அனைத்து இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் தலைமையின் கீழ், நாற்பது விவசாயிகள் சங்கங்கள் இரண்டு நாள் மராத்தான் கூட்டத்தை நடத்தின. அதன் இறுதியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

வியாழக்கிழமை முடிவடைந்த கூட்டத்தில், அவர்கள் விவசாய நெருக்கடியை மக்களவைத் தேர்தல்களுக்காக ஒரு பெரிய பிரச்சினையாக மாற்ற முடிவு செய்தனர். மோடி அரசின் ஐந்து ஆண்டு ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட விவசாய கொள்கைகள் மற்றும் முடிவுகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

விவசாயிகள் நலனுக்காக தற்போது மோடி செய்துள்ள அறிவிப்புகள் எல்லாம், மூன்று மாநில சட்டசபைத் தேர்தல்களில் அவரது கட்சிக்குக் கிடைத்த தோல்விகளைக் கருத்தில் கொண்டே, “என்று மகாராஷ்டிராவின் விவசாயிகள் தலைவர் விஜய் ஜவாண்டியா இந்தக் கூட்டத்தில் தெரிவித்தார்.

மோடி பிப்ரவரி 24 ம் தேதி லக்னோவில் பிரதம மந்திரி விவசாய நிதி திட்டத்தை 2020 ஆம் ஆண்டுவரை 75,000 கோடி ரூபாய்க்கு முன்மொழிந்தார்.

பாரதீய ஜனதா கட்சி (பாஜக) சட்டப்பேரவைத் தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பின்னர் மோடி அரசாங்கம் இந்த திட்டத்தைக்கொண்டு வந்திருக்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதுவரை இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு 5,215 கோடி ரூபாயை 2.6 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது.

“அரசு இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு இது பயன்படாது. விவசாயிகள் அதை விரும்பவில்லை. அனைத்து விவசாயிகளும் தங்கள் உற்பத்திகளுக்கு நியாயமான விலை கொடுக்கப்படவேண்டும் என்றே கேட்கிறார்கள் ஆனால் அதற்கு அரசு எந்த  உத்தரவாதம் அளிக்கவில்லை, என “பாரதீய கிசான் சங்க (பி.கே.யூ) தலைவர் யுத்வீர் சின் ஊடகங்களின் கேள்விக்குப் பதிலளிக்கையில் கூறினார்.

மேலும் அவர் “இந்த கூட்டத்தில், சீனா, ஆஸ்திரேலியா மற்றும் பத்து நாடுகள் அடங்கிய ASEAN உட்பட, 16 நாடுகளுடன் தற்போது இந்தியா பேச்சுவார்த்தை நடத்தும் பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை (RCEP) ஒருமனதாக நிராகரித்துள்ளோம்.”  என்றும் கூறினார்.

“இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும். இது இந்தியாவில் விவசாய சமுதாயத்தையே முழுமையாக அழித்துவிடும். ஏனெனில் இத்திட்டம் 92% வர்த்தகப் பொருட்களின் சுங்க வரிகளை அகற்றும் இதனால் மலிவான பொருட்கள் நாட்டினுள் வெள்ளமெனப்பாயும்” எனப்  பஞ்சாப் மாநில விவசாயி தலைவர் அஜ்மீர் சிங் லக்வாவால் தெரிவித்தார்.

கர்நாடகா ராஜ்ய ராய்த்தா சங்கத் தலைவர் சம்ராச மாலி பாட்டீல், “வடக்கு மற்றும் தெற்கு இந்தியாவில் உள்ள விவசாயிகள், ஒன்றாக இணைந்து, அமையவிருக்கும் புதிய அரசாங்கத்தை இந்த உடன்படிக்கையை நிராகரிக்க அழுத்தம் தரவிருக்கிறார்கள்.” எனக் கூறினார்.

விவசாயிகள் சங்கம் இந்த கூட்டத்தில் 18 கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் விவசாயிகளின் முழு கடன் தள்ளுபடி, உற்பத்தி செலவை விடக் குறைந்தது ஒன்னரை மடங்கு கூடுதல் விலை தரவேண்டும், விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச மாத ஊதியமாக 5,000 முதல் 10,000 வரை தரவேண்டும் உட்படப் பல கோரிக்கைகளை வைத்துள்ளனர். அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் இந்த கோரிக்கைகளை இணைக்குமாறு அவர்கள் வேண்டிக் கேட்டுக்கொண்டார்கள்.

இப்படி விவசாயிகளுக்கு நீண்டகால தீர்வுகளை அளிக்காமல் தேர்தலில் வெற்றிபெறக் கொடுக்கப்படும் இதுபோன்ற தற்காலிகமான உள்நோக்கம் கொண்ட அறிவிப்புகள் நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை எந்த விதத்திலும் மகிழ்விக்காது மாறாக அவர்களை இன்னும் உடைக்கத்தான் செய்யும்.