பெண்களுக்கான அரசியலமைப்பு உரிமைகள் எவ்வாறு மறுக்கப்படுகின்றன என்பதை விவாதிக்க இந்தியா முழுவதிலிருந்தும் 150க்கும் மேற்பட்ட பெண் ஆர்வலர்கள் தலைநகர் டில்லியில் நடந்த மாநாட்டில் ஒன்றுகூடினார்கள்.

சமீபத்தில் நடிகர் அக்க்ஷை குமார் பிரதமர் மோடியை எடுத்த “அரசியலற்ற” பேட்டியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நேர்மாறாக கடுமையான 56 கேள்விகளை அவர் முன் வைத்தனர். இதை அவர்கள் “அரசியல் அல்லாத” மாநாடு என்றழைத்தனர்.

தேர்தல் நடக்கும் நேரத்தில் இது ஒரு சுய விளம்பரம் போன்றது என ஒரு ஆர்வலர் பேட்டியின்போது தெரிவித்தார். நாட்டில் நெருப்பைப் போன்று கொழுந்து விட்டெறியும் பிரச்சனைகளான வேலையின்மை, பெரும் ஊழல், கொடூரமான முதலாளித்துவம், அதிகரித்து வரும் வெறுப்பு, பணவீக்கம் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றை மக்கள் கடந்த ஐந்து வருடங்களாக சந்தித்து வரும் வேளையில் அதைப்பற்றி கேள்விகள் எழுப்பாமல் அதையெல்லாம் மூடி மறைக்கும் வகையில் அவரிடம் முக்கியமில்லாத கேள்விகளைக் கேட்கின்றனர்.

கடந்த சில ஆண்டுகளாக அரசியலமைப்பின் மீது நேரடி தாக்குதல் நடத்தியதால், குறிப்பாக அரசியலமைப்பு நமக்கு உறுதியளித்த கருத்துச் சுதந்திரம், பேச்சு, ஆடை, எழுதுதல், சாப்பிடுவது மற்றும் தேர்ந்தெடுக்கும் உரிமை – போன்றவற்றில் பெண்களுக்கு கடும் விளைவுகள் ஏற்படுகின்றன. எதிர்ப்பின் குரல்கள் திட்டமிட்டு அமுக்கப்பட்டன என்று அவர்களில் பத்திரிக்கை வெளியீடு குறிப்பிடுகிறது.

நாங்கள் இந்த 56 கேள்விகளை 56 இன்ச் அகல மார்பு கொண்டவரிடம் கேட்கிறோம். எங்கள் கேள்விகள் பசி, கிராமப்புறத் துன்பம், விவசாயிகளின் தற்கொலைகள், வேலையின்மை, ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நீதித்துறை, பத்திரிகை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய புலனாய்வு அமைப்பு போன்ற நிறுவனங்களின் மீதான தாக்குதல்கள் தொடர்பாகவும் எங்கள் கேள்விகள் உள்ளன. என சமூக ஆர்வலர் ஹஷ்மி மாநாட்டில் தெரிவித்தார்.

அந்த 56 கேள்விகள்

1)           கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை வேலைகள் உருவாக்கப்பட்டன? வேலையின்மை பற்றிய அதிகாரப்பூர்வ தரவுகளை ஏன் அரசாங்கம் மறைக்கிறது? EPFO (ஊழியர் சேமலாப நிதியம்) தரவு பொருளாதாரம் முறைப்படுத்தப்படுவதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, வேலை உருவாக்கம் அல்ல, மேலும் முத்ரா திட்டத்தின் கீழ் உள்ள பெரும்பாலான கடன்கள் எந்தவொரு வேலைவாய்ப்பும் உருவாக்க முடியாத அளவுக்கு சிறியவை.

2)            பணமதிப்பிழப்பின் நோக்கம் கறுப்புப் பணத்தை வெளிக்கொண்டுவருவது, பயங்கரவாத நிதிகளை நிறுத்தி, ஊழலை ஒழித்து, போலி நாணயத்தை ஒழிப்பது எனப் பல காரணங்கள்  சொல்லப்பட்டது. அவர் சொன்ன அந்த இலக்குகளை அடைந்துவிட்டதா? அப்படியென்றால் அதற்கான சாட்சியங்கள் எங்கே?

3)            விவசாயிகள் தற்கொலை விவரங்களை 2015 இல் இருந்து தகவல்களை அரசு வெளியிடாதது ஏன் ? இந்த பிரச்சனையை ஏன் இன்னனும் கவனிக்கத் தவறுகிறது?

4)            பராஷ்டசார் முக்த் பாரத் எங்கே?

5)            கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் மற்றும் தவறுகளை அம்பலப்படுத்தியதற்காக உண்மையான சௌக்கிதார்களான 40 பேர் கொல்லப்பட்டனர். அவர்களை காப்பதர்க்கான சட்டம் 2014 இல் இயற்றப்பட்டது. ஆனால் அதை ஏன் அமல்படுத்தப்படவில்லை  அவர்களுக்கான பாதுகாப்பு எங்கே ?

6)            மக்களின் குறைகள் விரைவாகத் தீர்க்கப்படும் சட்டம் 2014 இல் காலாவதியானது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இச்சட்டம் தொடரப்படும் எனச் சொன்னீர்கள். ஆனால் இந்த ஐந்து வருடங்களில் ஏன்  மீண்டும் அறிமுகப்படுத்தப்படவில்லை ?

7)            தங்கள் வேதனையைச் சொல்லத் தேசம் முழுவதிலிருந்து கிளர்ந்து வந்த லட்சக்கணக்கான விவசாயிகளை ஏன் அரசு சந்திக்கவில்லை?

8)            விவசாயிகளின் வருவாய் உங்கள் ஆட்சியில் எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. பாஜக 2022 இல் அது இரண்டு மடங்காகும் என உறுதியளித்துள்ளனர்.

9)            பி.ஜே.பி வெளிநாட்டிலிருந்த கருப்பு கறுப்புப் பணத்தைத் திரும்பக் கொண்டுவருவதாக உறுதியளித்தது. மேலும் ஒவ்வொரு இந்தியரின்  வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் பணம் வைப்பு நிதியாக செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு கருப்புப் பணம் மீட்கப்பட்டது.

10)          40 சி‌ஆர்‌பி‌எஃப் ஜாவான்கள் படுகொலை செய்யப்பட்ட புல்வாமா தாக்குதலில்   உளவுத்துறை தோல்விக்கு ஏன் யாரும் பொறுப்பேற்கவில்லை?

11)          பாஜகவுக்கு யார் நிதியளிக்கிறார்கள்? அரசியல் கட்சிகளுக்கு அநாமதேய நன்கொடைகளை அனுமதிக்கும் தேர்தல் பாண்டுகளை பாஜக ஏன் அறிமுகப்படுத்தியது?

12)          காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரேவை அவமதித்த பயங்கரவாத குற்றம் சாட்டப்பட்ட பிரியா தாக்கூர் ஏன் பாஜகவுக்குப் போட்டியிடுகிறார்?

13)          பா.ஜ.க.வின் மந்திரி ஏன் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கூலிப் படையினரை மாலை அணிவித்து வரவேற்றார்?

14)          பா.ஜ.க ஊழலைக் கடுமையாக எதிர்ப்பதாகச் சொல்லி அதிகாரத்திற்கு வந்தது. ஆனால் அதன் ஆட்சிக் காலத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தைப் பலவீனப்படுத்தியது ஏன்?

15)          பிப்ரவரி 2015 ல் முன்னாள் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் திவாலாளர்களின் வங்கிப் பட்டியலைச் சமர்ப்பித்துள்ளார். அரசு

அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது? அரசாங்கம் ஏன் அப்படிப்பட்ட பட்டியலை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கவும் தயங்குகிறது?

16)   தனது கல்வித் தகுதிகள் மீதான சந்தேகங்களை மோடி ஏன் தெளிவுபடுத்த மறுக்கிறார்?

17)   பணமதிப்பிழப்பு நடவடிக்கை தோல்வியடைந்தால் எந்த தண்டனையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என்று மோடி அறிவித்திருந்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை விளைவுகளைப் பற்றி ஏன் எந்த ஒரு அறிக்கையும் அரசு வெளியிடவில்லை. அதை அறிவிப்பதற்கு முன் யாருடன் கலந்தாலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.?

18)   லோக்பால் நியமனம் செய்ய பாஜக அரசு கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் எடுத்தது ஏன்?

 

19)    பா.ஜ.க அரசு தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பலவீனமாக்க  முயல்வது  ஏன்?

20)    சிபிஐ இயக்குநரான அலோக் வர்மாவை பாஜக அரசாங்கம் ஏன் சட்ட விரோதமாக நீக்கியது, தேர்வுக் குழுவை தவிர்ப்பதற்காக இடைக்கால சிபிஐ தலைவர் நியமிக்கப்பட்டதா?

21)   சிறுபான்மையினருக்கு எதிரான குற்றங்கள், குறிப்பாக முஸ்லீம்கள் மீது அதிகரித்து வரும் வெறுப்பு, ஆகியவற்றில் ஏன் அரசு நடவடிக்கை எடுக்காமல் மௌனமாக உள்ளது?

22)    கடந்த 5 ஆண்டுகளில் பிரதம மந்திரி ஏன் ஒரு செய்தியாளர் சந்திப்பைக் கூட கூட்டவில்லை?

23)    ரஃபேல் மோசடி குற்றச்சாட்டுகளுக்குப் பிரதமர் ஏன் பதிலளிக்கவில்லை?

24)    ரஃபேல் விமானங்களை வாங்குவதில் ஏற்பட்ட  ஊழல் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யப் பாராளுமன்ற கூட்டுக் குழுவைப் பிரதமரும் அரசாங்கமும் ஏன் அனுமதிக்கவில்லை?

25)  ரூபாயின் வீழ்ச்சியை அரசாங்கம் ஏன் தடுக்கவில்லை?

26)  எப்படி மல்லையா, நரேவ் மோடி, மெஹுல் சோக்ஸி போன்றோர் இந்தியாவில் இருந்து தப்பினார்?

27) கடந்த 5 ஆண்டுகளில் குடிமக்கள் நீதிமன்றத்திற்குச் சென்றாலன்றி மத்திய தகவல் ஆணையத்திடம்

ஒரு நியமனம் செய்யப்படவில்லை. அரசு ஏன் பணியிடங்களை நிரப்புவதில் தாமதிக்கிறது?

28)  பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மற்றும் பகுத்தறிவுவாதி கல்புர்க்கி படுகொலைகளில் பாஜக. ஏன் அமைதியாக இருக்கிறது?

29)  வடகிழக்கு மற்றும் தென்னிந்தியா மாநிலங்களில் மாட்டிறைச்சி பயன்படுத்துவதில் பாஜகவின்  பார்வை என்ன?

30)  பெண்களைச் சபரிமலையில் அனுமதிக்கும் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாஜக ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?

31)  2014-2019 வரை பேட்டி பச்சாவ் பேட்டி பத்தாவ் போன்ற  திட்டங்களுக்கான விளம்பரங்களுக்கு ஏன் 50% அதிகமாக செலவழிக்கப்பட்டது?

32)  உஜ்ஜவாலா திட்டத்தின் விரிவான, அதிகாரப்பூர்வ மதிப்பீட்டை அரசாங்கம் ஏன் எடுத்துக் கொள்ளவில்லை?

33)  சுவச் பாரத் திட்டத்தின் கீழ் எத்தனை கழிப்பறைகள் கட்டப்பட்டன? அதில் எத்தனை உண்மையில் நீர் விநியோகத்துடன் செயல்படுகின்றன? இந்த திட்டத்தை விளம்பரப்படுத்த எவ்வளவு செலவளிக்கப்பட்டது?

34) பாஜக அரசாங்கத்தின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2014 மற்றும் 2018 க்கு இடையில் 34% அதிகரித்துள்ளது. பிரச்சி

னையை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த நடவடிக்கை என்ன?

35) சட்டமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என பாஜக உறுதியளித்தது. அந்த சட்டம் ஏன் இன்னும் இயற்றப்படவில்லை?

36) ஒவ்வொரு வருடமும் சர்வ சிக்க்ஷா அபியான் திட்டத்திற்கான நிதி ஏன் குறைக்கப்பட்டது. கல்வி செலவினம் 2018-’19 ல் 10 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்தது.

37)  பெண்கள் சந்திக்கும் கடுமையான வேலை இழப்புகள் மற்றும் அவர்களுக்கு நிகழும் பொருளாதார இழப்பீடு போன்றவற்றை ஏன் அரசாங்கம் தீர்க்கவில்லை?

38)  ஆசிரியர் பற்றாக்குறை, கல்வித் தரம் காரணமாக அரசாங்க பள்ளிகளில் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த விவகாரங்களை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

39)  UP போன்ற மாநிலங்களில் அதிகரித்து வரும் என்கவுண்டர் மரணங்களுக்கு பாஜக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

40)   பட்டினியால் நாடு முழுவதும் 75 கும்  மேற்பட்டோர் இறந்துபோனதற்கு ஏன் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை?

41)   சர்வதேச விலைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ள போதிலும், எரிபொருளின் விலை இந்தியாவில் இன்னும் ஏன் அதிகமாக உள்ளது?

42)    ஏன் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் மறுவாழ்வு சட்டம் மற்றும் சுரங்க மற்றும் கனிம (அபிவிருத்தி & ஒழுங்குமுறை) சட்டம் ஆகியவை  கிராமப்புற சபாக்களின் அனுமதியின்றி தனியார் நிறுவனங்கள் ஆதிவாசி மற்றும் வன நிலத்தைக் கையகப்படுத்த அனுமதிக்கப்பட்டது?

43)    வன உரிமைச் சட்டத்தைப் பாதுகாக்கும் வழக்கில் மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் ஏன் தவறிவிட்டது?

44)    பொதுமக்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்குப் பதிலாக, அனைவருக்கும் தரமான சுகாதாரத்தை உறுதி செய்வதற்குப் பதிலாக, தனியார் நிறுவனங்களுக்கு நன்மை தரும் காப்பீடு திட்டங்களுக்கு ஏன் அரசாங்கம் உதவுகிறது?

45)   மத்திய உணவு திட்டத்திற்கான வரவு-செலவு ரூ. 2014 ல் 10,523 கோடி ரூபாயிலிருந்து 2018 -1919 ல் 9949 கோடி க்கு ஏன் குறைக்கப்பட்டது.? மதிய உணவுத் திட்ட நிதியும் ஏன் குறைக்கப்பட்டது?

46)   மகப்பேறு நன்மைகள் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி குறைந்தது ரூ. 6,000 கோடி வழங்கப்படவேண்டும். ஏன் அது 5000 கோடியாக குறைக்கப்பட்டது.?

47)   அவசரச் சட்டங்கள் கொண்டு வருவதன் மூலம் மட்டுமே  பாராளுமன்றத்தில் ஏன் முக்கியமான சட்டமன்ற மாற்றங்களை மேற்கொள்ளப்படுகிறது? உதாரணமாகத் தனியார் நிறுவனங்கள் ஆதார் விவரங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் எனச் சட்டம் கொண்டு வந்தது.

48)   NREGA இன் கீழ் ஊதிய தாமதத்தின் முக்கியமான சிக்கலை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன?

49) ஏன் ஆதார் மீதான நிலைப்பாட்டில் முழுமையான மாற்றம்?

50) குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் ஒரு தனி நபருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படுவதை விமர்சித்தார். ஒருவருக்கு இது எப்படி போதுமானதாக இருக்கும் என்று கேள்வி எழுப்பினார். அப்படியிருக்க இந்தியாவின் பிரதமராக இருந்தபோது ஒரு குடும்பத்திற்கே கூட 1கிலோ அரிசியை அவர் ஏன் அதிகரிக்கவில்லை?

51) துப்புரவாளர்கள் துப்புரவு செய்யும் போது, ​​கையால் துப்புரவாளர்களின் இறப்பு பிரச்சினை குறித்து அரசாங்கம் ஏன் தவறிவிட்டது?

52) கடந்த 5 ஆண்டுகளில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் மீதான மொத்த செலவு என்ன?

53) குறிப்பிடத்தக்க சட்டப்பூர்வ மாற்றங்களுக்கு அரசாங்கம் ஏன் மில் பில் வழியை தேர்ந்தெடுத்தது குறிப்பாக ஆதார் மற்றும் தேர்தல் பத்திரங்கள். மாநிலங்களவையில் இது குறித்த விவகாரங்களில் ஆய்வு மற்றும் விவாதத்தைத் தடுக்க இது செய்யப்பட்டதா?

54) மோடி அரசாங்கம் விளம்பரத்திற்காகச்  செலவிடப்பட்ட மொத்த செலவினம் என்ன?

55) ஆதார் மீதான கூற்று மிகவும் மிகைப்படுத்தப்பட்ட மற்றும் பொய்யானது என்று தெளிவான சான்றுகள் இருந்த போதினும், பிரதமர் மற்றும் அரசாங்கம் இந்த கூற்றுகளை ஏன் திரும்பத் திரும்பக் கொண்டு வருகின்றன?

56)  2016 இல் திருநங்கைகள் நலன் குறித்து பாஜக அரசு சட்டம் இயற்றுவதற்கு முன் ஏன் திருநங்கை உரிமைக் குழுக்கள் மற்றும் அமைப்புகளிடம் ஏன் அரசு கலந்தாலோசிக்கப்படவில்லை?

இன்று நியாமாக ஒவ்வொரு பத்திரிக்கையும் பிரதமரிடம் கேட்கப்படவேண்டிய கேள்விகள் இவை. ஆனால் இப்படிப்பட்ட கேள்விகளை எதிர்கொள்ள மோடி மறுக்கிறார். ஒவ்வொரு பேட்டிக்கு முன்னரே அதில் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை அவர் பார்த்து இப்படிப்பட்ட கேள்விகளை அவர் தவிர்க்கிறார். தான் மாம்பழம் சாப்பிடுவது எப்படி என்பதை மட்டுமே இந்த தேசம் தெரிந்துகொள்ள அவர் விரும்புகிறார். ஆனால் இந்த கேள்விகளிடம் இருந்து அவர் வெகு காலம் தப்பிக்க இயலாது.