ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுபாட்டு பகுதியில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் 3 முக்கிய முகாம்களை இன்று (பிப்ரவரி 26) அதிகாலையில் 1,000 கிலோ அளவிலான வெடிகுண்டுகளை வீசி அழித்தது இந்திய விமானப்படை. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், உடனடியாக பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு, இந்திய விமானப்படை அறிவுறுத்தியிருக்கிறது.

புல்வாமா தாக்குதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமாவில் கடந்த 14ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதைதொடர்ந்து, பாகிஸ்தான் உடனான அனைத்து தொடர்புகளையும்  நிறுத்திவைத்துள்ளது இந்தியா. பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் எனக் கூறிய பிரதமர் மோடி, ராணுவ வீரர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என முழுசுதந்திரம் கொடுத்தார்.

பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

அந்த வகையில், புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று செயல்பட்டுள்ளது இந்திய ராணுவம். இந்தியா- பாகிஸ்தான் எல்லை பகுதியான பாலாகோட், சாக்கோதி, முஸாஃபராபாத் ஆகிய இடங்களில் இருந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளின் முகாம்களை இன்று அதிகாலை 3:30 மணி அளவில் குறி வைத்து தாக்கியது இந்திய விமானப்படை. 12 மிரேஜ் 2000 ரக போர் விமானங்கள் மூலம் சென்ற இந்திய ராணுவம், 1,000 கிலோ அளவிலான குண்டுகளை முகாம்கள் மீது வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் தீவிரவாதிகள் முகாம் முழுவதுமாக தகர்த்தப்பட்டதாக  விமானப்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் சுமார் 250க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தி இருப்பதை பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளது. இந்திய விமானப்படையின் பலத்தை கண்டு தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தானின் போர் விமானங்கள் திரும்பிச்சென்றதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவியும் பாராட்டுகள்

இந்திய விமானப் படையின் இந்த தாக்குதலுக்கு, ‘‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு ‘சல்யூட்’ ” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. நாட்டு மக்களை பாதுகாக்க விமானப்படையினர் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்  என்று பாராட்டியுள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

இந்திய விமானப்படையின் வீரதீர செயலுக்கு பெருமைப்படுகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், பாகிஸ்தானிலிருந்து செயல்பட்டுவந்த பயங்கரவாத முகாம்களை இந்திய விமானப்படை அழித்ததற்கு தமிழக சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறோம் என முதல்வர் பழனிசாமியும் தெரிவித்துள்ளனர். இதேபோன்று இந்திய ராணுவத்திற்கு நாடெங்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

பாக். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.

“பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் பற்றி பாகிஸ்தானுக்கு பலமுறை தகவல் தந்தோம். பலமுறை தகவல் தந்தும் பயங்கரவாத முகாம்களை அழிக்க பாகிஸ்தான் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை”  என்று தெரிவித்த விஜய் கோகலே, “இந்திய விமானப்படையின் தாக்குதலில் பயங்கரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார்; ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.” என்று கூறினார்.

தயார் நிலையில் உள்ள இந்திய ராணுவம்

இந்திய விமானப்படையினர் இன்று காலையில் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்க்கு பதிலடியாக, பாகிஸ்தான் எந்நேரத்திலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற தகவலால், இந்திய முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால், உடனடி பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்புகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறு, இந்திய விமானப்படை அறிவுறுத்தியிருக்கிறது.

அனைத்து கட்சி கூட்டம்

இந்திய விமானப்படையின் தாக்குதலை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, தனது இல்லத்தில், பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி உறுப்பினர்களுடன், இன்று காலை அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், பிரதமரின் அவசர ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. அதில், தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு சுஷ்மா சுவராஜ் விளக்க இருக்கிறார்.