மத்தியில் ஆளும் பாஜக அரசின் அமைச்சர்கள் நாளுக்கு நாள் சர்ச்சையான கருத்துகளைப் பொதுபரப்பில் பேசி மாட்டிக்கொள்வது சகஜமான விஷயமாகிவிட்டது. குருட்டாம்போக்காக, எந்தவித ஆதாரமும் இல்லாமல், இதற்கு அவர்கள்தான் காரணம், இதனால்தான் நடந்தது என எதுஎதற்கோ முடிச்சுபோடும் வேலையைத்தான் பாஜக ஏஜெண்டுகள் மற்றும் அமைச்சர்களின் கடந்த ஐந்தாண்டுகளாக செய்துவந்தனர். இதில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஏஜெண்ட்டுகள், தொண்டர்கள் மட்டுமல்லாது குருமார்கள், சாமியார்கள், யோகிகளின் கருத்துகளும் முக்கியத்துவம் பெருகிறது.

அந்தவகையில் மேற்கு வங்க பாஜக அமைச்சர் திலீப் கோஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார், “அதாவது… பெண்கள் இப்படி வீதிக்கு வந்து போராடுவதற்கு யார் காரணம் என்று நினைக்கிறீர்கள், அவர்களுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவர்களாக இல்லாமல் போதை மருந்து உட்கொண்டதால்தான் இப்படியெல்லாம் போராட வருகிறார்கள். தவறான வார்த்தையெல்லாம் உபயோகிக்கிறார்கள். நீங்கள் அவர்களது நடவடிக்கைகளை கவனியுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

அதாவது கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், பெண்கள் சிலர் தங்கள் முதுகிற்குப்பின் ரவீந்திரநாத் தாகூரின் பாடல் வரிகளை மாற்றி தவறான வார்த்தைகள் எழுதி நடனமாடியதாக சமூகவளைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பரவியது. இதனால் கல்லூரி துணைவேந்தர், தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். மேலும் “இது எங்கள் கல்லூரியே கிடையாது. அது வெளியிலிருந்து பெறப்பட்ட புகைப்படங்கள்” என்றும் கூறினார். இதைக் கண்டித்துத்தான் திலிப் கோஷ் அவர்கள் தன்னுடைய கருத்தைத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.