தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் தேதியை மாற்றி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறுகிறது. மக்களைவை தேர்தல் தேதியை மாற்றி வைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “கிறித்துவர்களின் பெரிய வியாழன் பண்டிகை வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 18ஆம் தேதி வருகிறது. கிறிஸ்தவ பள்ளிகளிலும் வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்படுவதால், இந்தப் பள்ளிகளுடன் இணைந்து இருக்கும் தேவாலயங்களில் வழிபாடு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக கிறித்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும், இல்லை என்றால் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்.” எனத் தமிழ்நாடு பிஷப் கவுன்சில் தலைவர் அந்தோணி பப்புசாமி மற்றும் கிறித்துவ நல்லெண்ண இயக்க நிர்வாக அறங்காவலர் இனிகோ இருதயராஜ் உள்ளிட்டவர்களும் கிருத்துவ அமைப்புகளும் கோரியிருந்தன.

இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (மார்ச் 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை சித்திரை திருவிழா, பெரிய வியாழன் உள்ளிட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய 3 மனுக்களையும் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டி, இந்த மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள்.