17ஆவது மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குபதிவு பலத்த பாதுகாப்புடன் 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் நடந்துமுடிந்தது.

2019 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று முதல் மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டமா நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மக்கள் அனைவரும் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இன்று முதற்கட்டமாக ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், ஜம்மு & காஷ்மீர், மஹாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிசா, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகண்ட், மேற்கு வங்காளம், லட்சத்தீவுகள், அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஆகிய 20 மாநிலங்களில் 91 தொகுதியில் இன்று வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதிகபட்சமாக ஆந்திர மாநிலத்தில் 25 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்கு பதிவு நடைபெற்றது.

மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குபதிவுகள்:

உத்தர பிரதேசம்: 59.67%

நாகாலாந்த்: 68%

தெலுங்கானா: 60.57%

அசாம்: 68%

மேகாலயா: 66%

பிகார்: 50.29%

லட்சத்தீவுகள்: 65.9%

மணிப்பூர்: 78.20%

மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தால் ஒடிசா மாநிலம் மல்கன்கிரி பகுதியில் அமைக்கப்பட்ட 15 வாக்குச் சாவடிகளில் ஒரு ஓட்டுக்கூட பதிவாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று ஒடிஷாவின் காலஹண்டியின் பேஜிபடார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களது கிராமத்திற்கு முறையான சாலைகள் அமைக்கப்படவில்லை என்பதற்காக இன்று நடைபெற்ற முதற்கட்ட தேர்தலில் வாக்களிக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உத்தராகண்ட் மாநிலத்தில் ஹல்த்வானி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததையடுத்து வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெறுகிறதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.