கிராம மக்களிடையே ஒட்டுச் சேகரிக்கச் சென்றபோது ”பிரதமர் மோடி, வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை வைத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ஆதார் அட்டைகளை வைத்து ஓட்டுப் போடாதவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படாது” எனக் குஜராத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ரமேஷ் கடரா கூறியுள்ளார்.

“மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஜஸ்வந்த் சிங் பாபூரின் [தஹோட் தொகுதியிலிருந்து போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்] புகைப்படத்தையும் தாமரை சின்னத்தையும் பார்த்து அந்தப் பட்டனை அழுத்த வேண்டும். இதில் தவறுயேதுவும் நடக்கக் கூடாது ஏனெனில் மோடி எல்லா வாக்குச் சாவடிகளிலும் கேமரா பொருத்தியுள்ளார்.”

மேலும் ரமேஷ் கடரா, “அந்தக் கேமரா வழியாக யார் காங்கிரசுக்கு ஒட்டுப்  போடுகிறார்கள் யார் பாஜகவிற்கு ஓட்டுப் போடுகிறார்கள் என்று நாங்கள் கண்காணித்துக் கொண்டிருப்போம். ஆதார் கார்ட் உட்பட அனைத்து அடையாள அட்டையிலும் உங்கள் புகைப்படம் உள்ளது. அதை வைத்து யாரெல்லாம் ஓட்டுப் போடவில்லையோ அவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் தரப்படாது” என்று கூறினார்.

பாஜக தலைவர்கள் மக்களை மிரட்டுவது இது முதன்முறை அல்ல. மேனகா காந்தி உத்திரப்ரதேசத்திலுள்ள பிலிபிட்டில் போட்டியிடும் தனது மகனுக்காக வாக்கு சேகரிக்கும்போது “பாஜகவிற்குக் கிடைக்கும் ஓட்டுகளைப் பொறுத்து அங்கு வேலை வாய்ப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.

கடந்த வாரம் மேனகா காந்தி முஸ்லிம் வாக்காளர்களை மிரட்டும் விதமாக “எனக்கே ஓட்டுப் போடுங்கள் இல்லையென்றால் மீண்டும் நான் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுக்கு எந்த உதவியும் செய்யமாட்டேன்” என்று பகிரங்கமாகவே தெரிவித்தார். “உங்கள் வாக்கு இல்லாமலேயே நான் வெற்றி பெறுவேன்” என்றும் அவர் கூறினார். அவருடைய இந்தக் கண்டனத்திற்குரிய பேச்சுக்குத் தேர்தல் ஆணையம் அவருக்கு 48 மணி நேரத் தடை விதித்தது.

கடந்த வெள்ளிக்கிழமை பாஜக எம்பி சாக்க்ஷி மஹராஜ் “எனக்கு வாக்களிக்கவில்லையென்றால் உங்கள் குடும்பத்தில் உள்ள நிம்மதி போய் விடும் என்று சபித்துவிடுவேன்” என்று அதிரவைத்தார்.

வாக்கு கேட்டு வரும்போதே மக்களிடையே இவ்வளவு ஆணவமும் திமிரான மனப்போக்கும் கொண்ட இவர்கள் ஒரு வேளை வெற்றி பெற்றால் நம் நிலைமை என்ன ஆகும் என நினைக்கும்போதே அச்சமாக இருக்கிறது.