புனே மத்திய சிறையில் இருக்கும் 80 வயதான வரவர ராவ் என்பவர் தூங்குவதற்கு போர்வை வேண்டும் என்று கடந்த மாதம் கேட்டுள்ளார். அவருக்கும் போர்வை ஒன்று கூடுதலாக கொடுக்கப்பட்டது. நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் அதிகாரிகளுக்கு எதிராகப் பேசியதால், அந்தப் போர்வை திரும்பப் பெறப்பட்டது.  யார் இந்த வரவர ராவ்? பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 எழுத்தாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுள் இவரும் ஒருவர்.

 

பீமா கோரேகான்

1818இல் பீமா கோரேகான் பகுதியில் கிழக்கிந்திய கம்பெனி தலைமையில் ‘மகர்’ படைவீரர்களுடன் நடந்த சண்டையில், பேஷ்வாக்களின் பெரும் படை தோற்றது. மகர் படையில் அதிக எண்ணிக்கையில் தலித்துகள்தான் இருந்தனர். மஹாராஷ்டிரா பிராமணர்கள்தான் பேஷ்வாக்கள். 1927இல் இந்த இடத்திற்கு சட்டமேதை அம்பேத்கர் வந்திருக்கிறார். எனவே இந்த நிகழ்வை, தங்கள் வீரம் வெளிப்பட்ட நிகழ்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் தலித் மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

 

 

 

கலவரம்

மஹாராஷ்ட்ர மாநிலத்தின் பீமா கோரேகான் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த எல்கார் பரிஷத் பேரணியில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் அங்கு நடந்தன. இந்த வன்முறைச் சம்பவத்திற்கு காரணம், அந்தக் கூட்டத்தில் பேசிய  மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கௌதம் நவ்லகா, வெர்னான் கன்சால்வஸ், அருண் பெரைரா, வரவர ராவ் ஆகியோர் என அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வீடுகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, இந்தக் கலவரம் தூண்டப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை ஆர்வலரும், கல்வியாளருமான ஆனந்த் டெல்டும்டேவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது.

 

கைது செய்யத் தடை

காவல்துறையினரின் கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக ஆனந்த் டெல்டும்டே உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனந்த் டெல்டும்டேவை நான்கு வாரக் காலத்துக்கு கைது செய்யக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பிப்ரவரி 11ஆம் தேதிவரை ஆனந்த் டெல்டும்டேவை கைது செய்யக் கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மாவட்ட நீதிமன்றம் ஆனந்தின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததன் அடிப்படையில், கடந்த 2ஆம் தேதி மும்பையில் அவர் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவை மீறி ஆனந்த் கைது செய்யப்பட்டதாகக் கூறி அவரை விடுவிக்குமாறு புனே நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, முன்ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆனந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் மிஹிர் தேசாய் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணையில், புனே போலீசார் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அருணா பாய், பிப்ரவரி 12ஆம் தேதி நள்ளிரவு வரை ஆனந்தை கைது செய்ய மாட்டோம் எனத் தெரிவித்தார்.

 

மறுக்கப்படும் உரிமைகள்

இந்திய ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கருத்துரிமை தெரிவிக்கும் உரிமை உண்டு. ஆனால், பாஜக அரசின் ஆட்சியில் கருத்துரிமைகளுக்கும் இடமில்லை. இதை எதிர்த்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படக் கூடிய கருத்துகளை, பத்திரிக்கையாளர்களும், எழுத்தாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களுக்கும் தெரிவித்தால் அவர்கள் மீது தாக்குதலையும், அடக்குமுறைகளையும் ஏவுகிறது பாஜக அரசு. பெண்கள் வாழத் தகுதியற்ற நாடாக இந்தியா உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் பத்திரிக்கையாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் அதிக அளவில் கொல்லப்பட்டுள்ளனர். மனித உரிமை மீறல்களும் அதிகளவில் நடந்துள்ளது. கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர்களைத் துன்புறுத்திவருகின்றனர்.