முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார் எனச் சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி 6ஆவது முறையாக மூவர்ண கொடியை ஏற்றி, மக்களிடையே உரை நிகழ்த்தினார். ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம் என்று பேசிய பிரதமர் மோடி, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது ’நீரின்றி அமையாது உலகு’ எனத் திருக்குறளை மேற்கோள் காட்டி தமிழில் பேசினார்.

“புதிய அரசு பதவியேற்று 10 வாரங்கள் கூட முடியாத நிலையில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டு மக்களுக்குச் சேவையாற்றப் பல புதிய திட்டங்களைச் செய்ய தொடங்கிவிட்டோம். ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரவேண்டும். வீடுகளுக்குக் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்காக வரும் ஆண்டுகளில் ரூ.3.50 லட்சம் கோடி செலவிடப்படும். தேவையற்ற பழைய சட்டங்களை நீக்க மத்திய அரசு பாடுபட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் 1,450 சட்டங்கள் நீக்கப்பட்டு உள்ளது.” என்று உரையாற்றினார் மோடி.

ஜம்மு- காஷ்மீரில் 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் மூலம் வல்லபாய் படேலின் கனவு நனவாகி உள்ளது என்று பேசிய மோடி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தைத் துடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “ராணுவத்தின் பலத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் ராணுவம், கடற்படை, விமானப்படை என தற்போது தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் வரும் முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். Chief of Defence Staff என்ற பதவியில் புதிய அதிகாரி நியமிக்கப்படுவார்.” என அறிவித்தார்.

தாய் மண்ணை விவசாயிகள் பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை 30 முதல் 40 விழுக்காடு வரை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார். பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துவதை ஒவ்வொருவரும் நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

மேலும், சந்திரயான் 2 விண்கலம் நிலவை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகத் தெரிவித்த மோடி, விண்வெளி தொழில்நுட்பத்தில் இந்தியா புதிய சிகரங்களைத் தொட்டு வருவதாக கூறினார்.