மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் விடுமுறை என அறிவிக்கபட்டதையடுத்து வெறும் மூன்று நாட்களில்(ஏப்ரல் 12- ஏப்ரல் 14) டாஸ்மாக் கடைகளில் 422 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும்  நாளை(ஏப்ரல்,18) தேர்தல் நடைப்பெறவுள்ளது.  இதனை முன்னிட்டு ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 18 வரை மூன்று நாட்களுக்கு தமிழகம் முழுக்க டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது. இதனால் விடுமுறைக்கு முன்னதாக டாஸ்மாக் விற்பனை சூடுப்பிடித்தது.

இந்நிலையில் ஏப்ரல் 12 முதல் ஏப்ரல் 14 வரை வெறும் மூன்று நாட்களில் நம்பமுடியாத அளவிற்கு தமிழகத்தில் மதுவிற்பனை நடைப்பெற்றிருக்கிறது. இம்மூன்று நாட்களில் தமிழகத்தில் 422 கோடி மதிப்பிலான மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரையில் 139 கோடிக்கும், சென்னையில் 136 கோடிக்கும் மதுவகைகள் விற்பனையாகியுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து டாஸ்மாக் கடைக்காரர் ஒருவர் கூறுகையில்,”விடுமுறை நாட்களை சமாளிப்பதற்காக ’குடி’மகன்கள் அதிக சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைப்பதால் தான் இந்த மூன்று நாட்களில் விற்பனை அதிகரித்துள்ளது” என தெரிவித்தார். இதனிடையே தேர்தல் அறிவிப்பு வெளியானது முதலே டாஸ்மாக் கடைகளில் விற்பனை நன்றாக இருந்து வருகின்றது என டாஸ்மாக் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக சில நாட்களிலேயே தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 10% விற்பனை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.