வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராகப் போட்டியிடும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முன்னாள் பி.எஸ்.எப். வீரர் தேஜ்பகதூர் யாதவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், வாரணாசி மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் முன்னால் பாதுகாப்புப் படை வீரர் தேஜ்பகதூர் யாதவ் போட்டியிடுகிறார். இதைதொடர்ந்து, வாரணாசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், பிரதமர் மோடி, தேஜ்பகதூர் யாதவ் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்புமனு தாக்கல் தொடங்கி முடிவடைந்த நிலையில், வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் களம் இறங்கும் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் முன்னாள் பி.எஸ்.எப். வீரர் தேஜ்பகதூர் யாதவின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி நிராகரித்துள்ளார்.

பாதுகாப்பு படையில் பணியாற்றியவர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்றால் அவர்கள் பணி புரிந்த இடத்திலிருந்து தடையில்லா சான்று பெற்று வர வேண்டும் என்கிற விதியை தேஜ்பகதூர் யாதவ் பின்பற்றவில்லை என்று கூறி வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், “எனக்கு இதுதொடர்பாக உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை” என்று தெரிவித்துள்ளார் தேஜ்பகதூர் யாதவ்.