2014-ம் ஆண்டு பிரதமராகப் பதவி ஏற்றது முதல் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டதற்கு 443.4 கோடி ரூபாய்  செலவானது என்ற பில்லை ஏர் இந்தியா நிறுவனம், பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது.

நாட்டின் தொழில்வளத்தை உயர்த்த புதிய தொழிற்சாலைகளைக் கொண்டு வர பிரதமர் பல்வேறு நாடுகளுக்குச் செல்கிறார் என மத்தியில் ஆளும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால், பிரதமராகப் பதவி ஏற்ற முதல் ஆண்டிலேயே (ஜுன் 2014 முதல் ஜுன் 2015 வரை) 20 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதற்காக ரூ.37.22 கோடியை மத்திய அரசு செலவிட்டது. இதன் பிறகு இந்தப் பட்டியல் நீண்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஆனால், பா.ஜ.க இதைப்பற்றியெல்லாம் கவலைபடாமல் உள்ளது. இதற்கிடையே பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கான பில் தொகையை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது ஏர் இந்தியா விமானம் நிறுவனம்.

அந்த பில்லில், 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பல்வேறு நாடுகளுக்கு 44 ட்ரிப்புகளாகச் சென்றுள்ளார். ஒரே ட்ரிப்பில் ஆறு நாடுகளுக்கு மேல் சென்றது, இரண்டு நாடுகளுக்கு மேல் சென்றது என பல்வேறு பயணங்கள்  அடங்கும். இதற்காக 443.4 கோடி ரூபாய் கட்டணம் ஆகியுள்ளது என ஏர் இந்தியா விமானம் நிறுவனம் பில் அனுப்பியுள்ளது.