ராணுவ வீரர்கள் விஷயத்தில் அரசு தோல்வியடைந்துவிட்டதால் மக்களவை தேர்தலில் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளதாக ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் தெரிவித்துள்ளார்.

தேஜ் பகதூர் யாதவ், ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து புகார் கூறியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ ஆவார். எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றிய இவர்,  ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் மூத்த அதிகாரிகள் குறித்தும், அவர்கள் எல்லை பாதுகாப்பு வீரர்களை மனரீதியாக துன்புறுத்துவதாகவும் புகார் கூறினார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தேஜ் பகதூரின் வீடியோக்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எல்லாம் எல்லை பாதுகாப்புப்படை மறுத்தது. இதனையடுத்து தேஜ் பகதூர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தேஜ் பகதூர், வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடும் உ.பி-யின் வாரணாசி தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். தனியார் டிவி ஒன்றிற்கு இது தொடர்பாக பேட்டி அளித்துள்ள தேஜ் பகதூர், ”பல அரசியல் கட்சிகள் என்னை அணுகிய நிலையில் நான் சுயேட்சையாகவே போட்டியிட உள்ளேன். ராணுவ வீரர்களின் பெயரைச் சொல்லி பிரதமர் மோடி ஓட்டு கேட்டுக் கொண்டு இருக்கிறார்.  ஆனால் அவருக்கு மக்களின் ஆதரவு கிடைக்கப் போவதில்லை. வெற்றி பெறுவதோ, தோல்வி அடைவதோ என் நோக்கம் அல்ல” என அவர் தெரிவித்துள்ளார்.