பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாகண்ணு.

நாட்டில் கடன் தொல்லையால், விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவலநிலை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்த அவலநிலை நீங்க விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களையும் நடத்தினர். ஆனால், பாஜக அரசு விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். இதன்காரணமாகதான், முன்னதாக 5 மாநிலங்களில் நடந்த தேர்தலில்கூட பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது என்றும் கூறப்படுகிறது. வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூரில் நடந்த விவசாயக் கூட்டத்தில் கலந்துகொண்டார் அய்யாக்கண்ணு. அப்போது, பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் 111 தமிழக விவசாயிகள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் இருந்து 1100க்கும் மேற்பட்ட விவசாயிகள் வாரணாசி செல்ல உள்ளதாகவும் 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். அதேசமயம், விவசாயிகளை காப்பாற்ற வேண்டும், அவர்களுக்கு ஆதரவாகத் தேர்தல் அறிக்கை அமைய வேண்டும் என்றும் அரசியல் கட்சிகளுக்குக் கேட்டுக்கொண்டார்.

விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் நிர்வாண போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நாட்டின் தலைநகரான டெல்லியில் முன்னெடுத்தும், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிட்தக்கது.